Thursday, May 20, 2010

வலை

இப்போது தான் பார்கிறேன்
மேல் செல்லும் படிக்கட்டில்
ஒரே இரவில்
இத்தனை அழகாய்
இழைத்திருக்கிறது அந்த வலையை
எல்லாத்திசைகளையும் அடைத்து
அளந்து வைத்த நேர்த்தியுடன்
காற்றின் போக்குக்கு அசைந்து
ஆனாலும் கலையாது
எப்படி சாத்தியம்
இந்த அசாத்திய நுண்கலை

எழு சூரிய ஒளியில்
ஒவ்வொரு நூல் இழையும்
மினுக்கிறது பிசு பிசுப்பாய்
ஆர்வம் தொற்ற
ஆராய்கிறேன் மெல்ல
அதன் ஓரங்களெல்லாம்
மூலைக்கொன்றாய் நீள்கிறது
ஒரு நூல் பற்றி
நான் தடுமாறி மேலேற
நீண்டுகொண்டே இருக்கிறது
அந்த ஒற்றை நூல்
முடிவு தெரியாமல்
வலை முழுக்க
சுற்றி வருகிறேன்
நடுவில் அமர்ந்தபடியே
அமிழ்ந்த புன்னகையுடன்
அனைத்தையும் பார்கிறதந்த
கருஞ் சிலந்தி

Tuesday, May 11, 2010

பணிப் பெண்

அலுவலகம் வரும் முன்
இன்னும் பால்மணம் மாறா
என் செல்லக் குழந்தையை
வழியில் காப்பகத்தில் விட்டு
என்றும் சொல்வதை போலவே
இன்றும் சொன்னேன்
பத்திரமா பாத்துக்கோங்க
நீல பாக்ஸ்ல இருக்கறத
இப்போ கொடுத்துடுங்க
பாலை பிரிட்ஜ்ல வெச்சுடுங்க
ஒரு மணி நேரம் கழிச்சு
மறக்காம கொடுங்க
கொடுத்த பிறகு தூங்க வெச்சுடுங்க
அப்பப்போ போன் பண்ணறேன்
ஆயாவும் பொறுமையாக கேட்டு
புன்னகைத்து வழியனுப்பினாள் இன்றைக்கும்

கலங்கிய கண்களுடன்
அலுவலகம் வந்து
பரபர வேலைகள் முடித்து
இ-மெயில் செய்துவிட்டு
குழந்தை என்ன செய்கிறதோ
என்ற எண்ணத்தின் முடிவில்
காப்பகத்துக்கு தொடர்பு கொள்ள
என் குழந்தையின் அழுகுரலில்
நனைகிறதென் மேலாடை

Thursday, April 29, 2010

பேசி(ய) பொழுது

எதிர்பாரா நேரத்தில்
எதிர்பாரா இடத்தில்
பேசியின் ஆளுமைக்குள்
இருந்த நீ
கவனியாத அப்பொழுதில்
பருகக் கொடுத்தாய் உன்னை
மறக்க முடியாத
ஆச்சர்யப் பரிசாய் எனக்கு

ஒரு நீண்ட புன்னகையில்
என்னை பார்க்க செய்யும்
முயற்சியில்
உன் முகம் பார்த்தே
கடந்தன அச்சில வினாடிகள்
என்னை பார்த்தும் உணராமல்
பேசியின் மறுமுனையில்
இயங்கியதோ உன் மனது

மனதில் அடையாளமிட்டுக் கொண்ட
உன் வெளிர்நிற ஆடை
உறுதிபடுத்துமா
நான் பார்த்ததை
நிஜமென
உனக்கும் எனக்கும்

Sunday, April 25, 2010

நீயில்லாத நானில்லை

அந்த மழை நாளின்
ஓர் இரவில்
நீர்சொட்டும் மரத்தடியில்
ஒருவரை ஒருவர்
மௌனித்து பார்த்திருந்தோம்
தாழ் கிளையின்
ஒரு இலை விளிம்பை பற்றி
மெதுவாய் வழுக்கி விழுந்தது
நம் காதல்

முத்தமிட ஓரிடம் தேடி
எல்லைகள் கடந்து
ஓடிக் களைத்து
ஓரிடம் நிற்கிறோம்
திரும்பிப் பார்க்கையில்
யாரும் துரத்தவில்லை
நம்மை தவிர

மறந்து விடலாம் என்று
தீர்மானித்த பிறகும்
எத்தனை முறை
அணைத்தாலும்
மறுபடி பற்றிக்கொள்ளும்
அந்த மாஜிக் மெழுகுவர்த்தியாய்
உன் நினைவுகள்

இம்முறை எறிகிறேன்
ஏழுகடல், ஏழுமலை தாண்டி
ஒரு நீழ்குகையின்
ஆழக் குளத்துள்
விழுந்ததும் உணர்கிறேன்
கரையில் பாதி நீ
நீரில் பாதி நான்

Saturday, March 6, 2010

தேநீர் வாடிக்கை

மணி அதிகாலை ஐந்தைத் தொட்டது. இன்றைக்கான என் பணி முடிந்தது. என் இருக்கையிலிருந்து சோம்பல் முறித்தபடி எழுந்தேன். சில வருடங்களாக இரவு வாழ்க்கை எனக்கு பழகி விட்டிருந்தது. அதன் தனிமையும் எனக்கென்று தன்னை முழுமையாய் கொடுக்கும் அதன் பரிவும் எனக்கு எப்போதுமே மிக பிடிக்கும். இப்படித் தான் இரவில் விழித்திருப்பவர்கள் எல்லாம் உணர்வார்கள் என நினைக்கிறேன். தனிமை பிடிப்பவர்களுக்கேன் இருட்டு பிடிக்கிறது. ஒரு வேளை அந்த நிசப்தத்தில் வழிகிற ஒரு வித சோகம் பிடிக்கிறதோ. இரவு விழித்திருக்கும் ஒவ்வொருவரையும் முழுமையாய் கவனிக்கிறது. பகல் முழுக்க பரவிக் கிடந்தவர்களை காட்டிலும் இரவில் விழித்திருந்து தன்னை உணர்பவர்களை நேசிக்கிறது என்றே தான் தோன்றுகிறது எனக்கு. சன்னல் வழி பார்க்கையில் தூரத் தெரியும் இருட்டு மெல்ல மெல்ல பக்கம் வருகிறது. அது நெருங்க நெருங்க என்னுள் அது என்னை ஆட்கொண்டுவிடும் என்ற ஒரு பயமும் என்னையே தொலைத்து விடுகிற ஒரு வித ஆர்வமும் ஒரு சேரவே எழுகிறது. முதலில் என்னை சுகிக்கும் இருட்டு பின் தன்னோடு அணைத்து எடுத்துப் போகிறது. நானும் ஒரு சில நிமிடங்களேனும் இருட்டோடு பயணித்து கரைந்து போகிறேன். எப்போது இருட்டை பார்த்தாலும் இந்த உணர்வே மேலிடுகிறது.

சுதாரித்து நடந்து என் இரு சக்கர வாகனத்தின் இருப்பிடம் வந்தேன். காலை நேரத்தின் சிறு பனி வண்டியின் மேல் ஈரமாய் படர்ந்திருந்தது. கைகளாலேயே வழித்தெடுக்க உள்ளங்கைகளில் இருந்து வழிந்தன சில துளிகள். பனி நீரின் ஸ்பரிஷம் ஒரு பெண்ணின் தொடுகையை போல் என்னுள் ஊடுருவி சென்றது. சாவியை எடுத்து வண்டியின் துவாரத்தில் பொருத்தி மேலேறி அமர்ந்து சற்றே பின்னுக்கு எடுத்தேன்.ஒரு சில முயற்சிக்கு பிறகே குளிரில் உறைந்து கிடந்த என்ஜின் தன்னை சூடு படுத்தி கொண்டு உறுமத் தொடங்கியது.உடல் பற்றிய சிறு குளிரும், லேசாய் கண்களுக்கு மறைந்து இன்னும் உதிர்ந்து கொண்டிருந்த பனியும் வண்டியை நகர்த்தியதும் காதில் ஏறிக் குடைந்தது. குளிர் நுழைந்ததும் உடல் சிலிர்த்தது. தோளை சற்று மேலேற்றிக் குறுக்கி காதை மறைத்துக் கொண்டே சற்று தூரம் சென்றேன். விடிந்தும் விடியாத இந்த நேரத்தில் எத்தனை எண்ணங்கள் தோன்றுகிறது. யாரும் பேசாத பொழுதுகளில் தான் மனம் ஓயாமல் பேசுகிறது. அதுவும் கூட்டுக் குடும்பத்தில் எல்லா வேலையையும் முடித்து கணவனை அடையும் மனைவியை போல தனக்கே தனக்கான பொழுதுக்காய் காத்திருக்கிறது.

இன்று என்பதை எப்போது உணரும் மனது. எப்போதும் நேற்றைய நினைவுகளோ நாளைய கவலைகளோ மனதை ஆக்ரமிக்கிறது. இப்பவும் கூட நேற்றைய ஓரிரு சம்பாஷனைகளும் நிகழ்வுகளுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. யோசித்துப் பார்க்கையில் வருடத்தின் அத்தனை நாட்களும் ஒன்றும் புதியதாய் வாழ்வதில்லை நாம். அதில் முக்கால்பங்கு நாம் வாழ்ந்த நாட்களையே மறுபடி வாழ்கிறோம் என்றே தோன்றுகிறது. இந்த நொடியை அனுபவிப்பது எப்படி. இப்போது நான் செய்யப் போவதை நான் நாளை நினைவு வைத்திருக்க வேண்டியதில்லை. இந்த நிமிஷம் நான் வாழணும் அதுக்கு என்ன செய்யணும். யோசிக்கையில் கொஞ்சம் கஷ்டமான காரியம் போலதான் தோன்றியது. எங்கெல்லாமோ மனம் சென்றாலும் பழகி விட்டிருந்த வீதிகளும் இடங்களும் என்னை தாமே செலுத்தி எப்போதும் செல்லும் தேநீர்க் கடை வாசலில் நிறுத்தியது.

என்னை பழகிவிட்டிருந்த கடைக்காரருக்கு எனக்கு என்ன வேண்டும் என்றும் தெரிந்தது. ஒரு சிகரட்டை பிரித்தெடுத்து அதோடு வத்திபெட்டியும் சேர்த்து கடலை மிட்டாய் சீசாவின் மூடியின் மேல் வைக்கிறார். பிறகு ஒரு கிளாசில் எனக்கு தேநீரை ஆற்றுகிறார். என் நெடு நேர மௌனத்தை சிதைக்காத அவரின் புரிதலும் ஆற்றுகிற நேர்த்தியும் என்னை என்னிடமே விட்டுச் சென்றது. ஆற்றி விட்டு கொடுக்கிறார் ஒரு சிறு புன்னகையுடன். அதற்குள் பற்ற வைத்திருந்த சிகரெட்டை ஒரு கையிலும் தேநீரை மறு கையிலும் எடுத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி வந்து சாலையை பார்த்து நின்றேன். தேநீரின் ஒவ்வொரு துளியும் ஒரு மேம்பட்ட சுவையோட குளிருக்கு இதமாய் உள் இறங்கியது. கொஞ்சம் தேநீர் பிறகு சிகரெட்டை ஆழ்ந்து உள்ளிழுத்தேன். அந்த அனுபவம் என் ஒவ்வொரு அணுவையும் நேசிக்கிற ஒரு மகத்தான ஒருத்தி என்னை இறுகப் பற்றி உதடுகளை முத்தமிட்டது போல் என்னை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தியது. இழுக்கிற ஒவ்வொரு முறையும் முத்தங்கள்.அந்த நொடிகளை அந்த நொடிகளாகவே வாழ்ந்தேன்.

Friday, March 5, 2010

வெட்க நிலாக்கள்

கீழ் மூக்கில்
எதையோ
இழுத்து இழுத்து
ரசித்து சுவைக்கும்
ஒரு கிளியின்
ஆர்வத்தோடு
உனைச் சுவைக்க
நான் நெருங்க

கூச்சலிடும்
கிளிக் குஞ்சுகளாய்
என்னை உன்னிடம்
நெருங்க விடாது
பின் இழுத்துக் கொள்கிறது
இந்த வெட்கம்

எத்தனை முயன்றும்
வெட்கம் தொலைத்து
வெளிவர முடியாத தவிப்பில்
உன்னை பார்க்கையில்
கண்களில் வழியும்
குறுஞ்சிரிப்போடு
நீயும் ஏதேதோ
செய்கிறாய்

கடைசி முயற்சியாய்
பல வண்ணக் குப்பிகளில்
என் வெட்கத்தை நிரப்பி
இறுக மூடி
கிளைக்கொன்றாய்
அதில் தோரணம் அமைக்கிறாய்

தொந்தரவுகளற்று
நிசப்தத்தின் இசைக்கு
இசைந்தபடி
நம்மை மறந்து
ஆழ்ந்து நேசிக்கையில்
உயிர்பெற்று பிரகாசிக்கும்
வெட்க நிலாக்கள்
பூரண வெளிச்சத்தில்
கொஞ்சும் கிளிகள்

Sunday, February 28, 2010

என் ஆழ்மன காதலை

வருவதற்கு முன்னே
வந்து நிற்கிறேன்
வந்ததும்
கட்டி அணைக்கிறாய்

பார்காத பொழுதில்
பக்கத்தில் வருகிறேன்
பார்க்காதது போல்
பார்த்து விடுகிறாய்

தொடும் தூரம்
நெருங்கி நிற்கிறேன்
தொடாதும்
தொட்டு விடுகிறாய்

ரகசிய மொழியில்
பேசிக் கொள்கிறேன்
மௌனமாய் அதை
ஆமோதிக்கிறாய்

பார்க்கிறாய்
தொடுகிறாய்
அணைக்கிறாய்
ரசிக்கிறாய்

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...