Monday, January 27, 2014

4. காஞ்சி முதல் காரைக்குடி வரை : கங்கைகொண்ட சோழபுரம்





விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம் கூட்டு ரோடுக்கு பஸ் பிடிக்க காத்திருந்தோம். அதற்குள் ஸ்ரீ பைகளை எங்களருகில் வைத்து விட்டு அம்மா குடி நீரைத் தேடி வாங்கச் சென்றாள். அவள் எங்கு சென்றாலும் அம்மா குடி நீரைத் தவிர வேறு எதையும் வாங்க மாட்டேன் என்று பிடிவாதமாகவே இருந்தாள். பத்து ரூபாய்க்கு நல்ல குடிநீர் கிடைக்கும்போது நாம் எதற்கு அதிக விலைக்கு வாங்க வேண்டும் என்பது அவளின் ஞயாயம். என்னவோ அம்மா ஃபான், மிக்ஸியின் தரத்தை பார்த்துவிட்டு முதலில் ஒரு தயக்கத்தோடு தான் இருந்தேன் என்றாலும் அம்மா குடிநீர் எனக்கு எந்த தொந்தவரையும் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் அதை மட்டும் வைத்துக் கொண்டு நீரின் தரத்தை நிர்ணயிக்க முடியாது. பொதுவாக குடிநீரினால் எனக்கு தொந்தரவுகள் அதிகம் வராது என்பதால் வெளியூர்களுக்கு செல்லும்போது நான் எந்த நீரையும் குடிப்பேன். இதை சொன்னபோது ஸ்ரீ அப்படி எல்லா நீரையும் குடிக்க கூடாது இடத்திற்கு தகுந்தாற் போல நீரின் pH வால்யூ மாறும், அது நிச்சயம் தொந்தரவு செய்யும் என்றாள். அப்படியா எனக்கு இந்த pH அறிவெல்லாம் கிடையாது இதை எல்லாம் நீ எங்கே இருந்து பிடிக்கிறாய் என்றேன். கட்டிடம் கட்டுவதற்கு முன் அதை நாங்கள் அளவிடுவோம் என்றும் நீரின் அஸிடிக் தன்மையை காட்டும் என்றும் இன்னும் பிற விளக்கங்களையும் சொன்னாள். அவள் ஒரு கட்டடப் பொறியாளர். ஓ அப்படியா என்றேன். எனக்கும் ஏற்கனவே பிடித்திருந்த ஜலதோஷம் தொண்டைக்குள் கிச் கிச் மூட்டியதால் அவள் சொன்னபடியே கேட்டுவந்தேன்.
 
அவள் சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை எனவும் மனதுள் ஒரு வித அமைதியின்மை பரவியது. என்னோடுதான் இருக்கிறாள் என்று நன்றாகத் தெரிந்தும் ஏன் இவ்வளவு நேரம் இவளைக் காணவில்லை என்று சுமாவை வினவிக் கொண்டிருந்தேன். அதற்குள்ளாக நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து ஒன்றும் எங்களைப் பார்க்க வைத்து எங்கள் முன்னேயே சென்றது. சுமாவிற்கு தமிழ் படிக்கத் தெரியாது என்பதால் அவள் அதை பெரிதுபடுத்தவில்லை. எனக்குதான் அடடா இவ்வளவு நேரம் காத்திருந்து இதை விடுகிறோமே என்றிருந்தது. எங்கே போனாள் என்று கொஞ்சம் எரிச்சல் எட்டிப் பார்க்கும் நேரம் அவள் நீர் வாங்கி வரவும் இவ்வளவு நேரம் எங்கே போனாய் இப்போதான் ஒரு பஸ் போச்சு என்றேன். இங்க இவனுங்க பன்னிரண்டு ரூபா சொன்னானுங்க எதுக்கு ஜாஸ்தி கொடுக்கணும் அதான் கொஞ்சம் தள்ளிப் போய் வாங்கிட்டு வந்தேன் என்றாள். சரி வா அதுல ஏறி உக்காரலாம் என்று நின்று கொண்டிருந்த இன்னொரு பேருந்தைக் காட்டினேன். இதுக்கு காத்திருப்பதை விட, நிலையத்தின் பேருந்துகள் வெளியேறும் தளத்தை காட்டி, அது வெளியே போவதற்குள் அதையே சென்று பிடிக்கலாம் வா என்றாள். அவளுடையது ட்ரெ க்கிங்க் கால்கள் விறு விறுவென நடப்பாள். நானும் சுமாவும் கொஞ்சம் நிதானமாகத்தான் நடப்போம். எங்களினது bird watching நடை. இதனால் ஓரிரு முறை பேருந்து நிலையத்தின் ஜனத் திரளில் ஸ்ரீயை தொலைத்து மீண்டும் பிடித்தோம்.
 
எனவே எங்களின் நடைக்கு நிச்சயம் பேருந்து வெளியேறுவதற்குள் நிலையத்தின் அந்த முனையை அடைய முடியாது என்று எனக்கு தெரிந்து ஓரிருமுறை சந்தேகமாக வெளிப்படுத்தினேன். அவள் அப்படியே அது போனாலும் எல்லாப் பேருந்தும் அப்படிதான் வெளியே சென்றாக வேண்டும் எனவே நாம் அங்கேயே நின்று கொண்டு இதோ இந்தப் பேருந்து அங்கே வந்தாலும் ஏறி விடலாம் என்றாள். உனக்கு நிச்சயமாக எல்லாப் பேருந்தும் அவ்வழியாகத்தான் போகும் என்று தெரியுமா என்றேன். அவள் தெரியும் என உறுதியாக நின்றதால் நானும் சுமாவும் அவளைப் பின் தொடர்ந்தோம். அங்க மட்டும் போயிட்டு திருப்பி இங்க கூட்டிட்டு வந்தே உன்னக் கொலை பண்ணுவேன் என்றபடியே நடந்தேன். இப்படியாக நாங்கள் அந்த மூலைக்கு செல்வதற்குள் அந்த பஸ் போய்விட்டிருந்தது. சரி இங்கேயே நிற்கலாம் என்றாள். நாங்கள் நின்று கொண்டிருந்த போது அங்கே வந்து நின்ற இன்னொரு பேருந்தின் ஓட்டுனரிடம் சென்று இவள் ஏதோ கேட்டாள். நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து அவர்கள் சம்பாஷனையை கேட்க முடியவில்லை என்றாலும் இவர்களின் உரையாடலை ஓரளவு எளிதாக ஊகிக்க முடிந்தது. என் யூகப் படி இப்படிதான் இருந்திருக்க வேண்டும்.
 
ஏங்க இந்த பஸ் கும்பகோணம் கூட்டு ரோடு போகுமா?
 
இல்லை என்று அவர் பெரிதாக மண்டையை ஆட்டுகிறார். 
 
ஓ அப்போ அந்த பஸ் எங்கே வரும்? 
 
இவர் தன் கையை நாங்கள் எங்கே இருந்து வந்தோமோ அங்கே காட்டினார்.
 
இப்பொழுது அவளுக்கு என்னிடம் மாட்டிக் கொண்டதாக எண்ணம் தோன்றி இருக்க வேண்டும் குரலை கொஞ்சம் குறைத்து எப்படியும் இந்த வழியாதான வெளியே போகும் என்று கேட்க அவர் இன்னொரு தளத்தை காட்டி அப்படி போகும் என்று சொல்ல...
 
இதற்கு மேல் நான் அவர்களின் உரையாடலை பார்க்கவில்லை. எனக்குள் முசு முசு என்று வந்தது. அவள் மெதுவாக என்னிடம் வந்து நம்ம கொஞ்சம் அப்டி தள்ளிப் போய் நின்னுக்கலாமா என்றாள். ஏன் இங்கையே நிக்கலாமே என்றேன். அவள் தயங்கவும் ஏன் இங்க பஸ் வராதா என்றேன். வராது என்றாள். இப்போ அங்க நின்னுட்டு இருந்த பஸ் கூடப் போய்ருக்கும் என்றேன். நாங்கள் திரும்பி வேகமாக நடந்து அங்கே சென்றபோது அதுவும் எங்களுக்கு எட்டாத தூரத்தில் போய்க் கொண்டிருந்தது. ஸ்ரீ அதைப் பிடிக்கலாம் என்றாள். நான் வேண்டாம் இங்கேயே நிற்கலாம் என்றேன். இதற்கிடையில் சுமா நாம் ஏன் இங்கேயும் அங்கேயும் போய்க் கொண்டிருக்கிறோம் என்றாள். நான் எந்த பதிலும் சொல்லாமல் நின்றேன். மூவரும் நின்றிருக்க அப்போது ஒரு பஸ் வந்தது. அவரிடம் கும்பகோணம் கூட்டு ரோடு போகுமா என கேட்க அவர் போகும் என்றார். ஏறி அமர்ந்ததும் ஸ்ரீ, நடத்துனரிடம் நாங்க கங்கைகொண்ட சோழபுரம் போகனும் எப்டி போகனும் என்று கேட்டாள். கூட்டு ரோட்டுல இருந்த கும்பகோணம் பஸ் புடுச்சு ஜெயங்கொண்டான் கூட்டு ரோட்டுல இறங்கி போய்டுங்க என்றார். அவளுக்கு எங்கே செல்வதானாலும் குறைந்தது மூன்று பேரிடமாவது விசாரித்து சரி பார்த்து விட வேண்டும். எவ்ளோ நேரம் ஆகும் என்று கேட்டாள். எப்படியும் நீங்க போக ஆறு மணி ஆயிடும் என்று சொல்ல நான் கோயிலிருக்குமா என்று கேட்டேன். கோயில் இருக்கும் திறந்திருக்குமான்னு போய் பாருங்க என்றார். பார்ரா என்று ஒரு பார்வையோடு நான் ஸ்ரீயை நோக்க தன் புத்திசாலி தனமான பதிலை ஓட்டுனரிடம் இன்னொரு முறை விளக்கினார் என்று நினைவு. ஆனால் தேவையற்ற அலைச்சல்களால் உப்பிசம் ஏறி இருந்த மனதை ஆற்றுப்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
 
 
கூட்டு ரோடு வந்து இறங்கியதும் நாம் விழுப்புரம் சென்றதே வியர்த்தம் இந்த இடத்தை கடந்து தான் விழுப்புரம் சென்றிருக்கிறோம் என்று ஸ்ரீ சொன்னாள். எப்படியும் சாப்பிட இங்கே ஒன்றும் கிடைத்திருக்காது போனது நல்லது தான் என்று சுமா நினைவு படுத்தினாள். முற்றிய வெயில் மண்டையைக் குடைந்தது. சுமாவை மரத்தடி நிழலுக்கு போக சொல்லி விட்டு நாங்கள் இருவரும் அங்கேயே நின்று கொண்டோம். தங்கள் பாத்திர பண்டங்களுடன் இரு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பம் தரையில் அமர்ந்திருந்தது. சற்று தள்ளி நின்றிருந்த ஒரு அம்மா தெலுங்கில் இந்த ஆணை ஏதோ திட்டிக் கொண்டிருந்தது. திட்டினார் என்பது மட்டும் தெரிந்தது ஆனால் எனக்கொன்றும் புரியவில்லை. அதற்கு அந்த ஆண் ஏதோ பதில் சொல்ல, கூட அமர்ந்திருந்த பெண்மணி இவரிடம் ஏதோ சொன்னார். இவர் சும்மா இருந்த பிறகும் நின்றிருந்த அம்மா விடாது வம்புக்கு இழுத்தபடி இருந்தது. என்ன இரண்டு மனைவி பிரச்சனையா என்றேன். அவங்க பேசறது தெரியணுமா உனக்கு என்றாள். உனக்கு தெலுங்கு தெரியுமா என்றேன். ம்ம் என்று இந்த அம்மா அவர்கிட்ட சும்மா இருன்னு சொல்லுது அதுக்கு அந்த அம்மா அவ சொல்றபடி கேளு அவ சரியாத்தான் சொல்றான்னு சொல்லுது என்றாள். அப்படியும் ஆதி பிரச்னை என்னவென்று தெரிவதற்குள்ளாகவே கும்பகோணம் பஸ் வந்தது.
 
 கூட்டம் நிரம்பி வழிந்தது. பின் வழியில் நாங்கள் ஏறினோம். ஸ்ரீ ஏறி கொஞ்சம் உள்ளே தள்ளி நின்றாள். நடத்துனரிடம் டிக்கெட் வாங்கிய போது அவர் எங்களுக்கு பக்கத்தில் இருந்த ஸீட்டைக் காட்டி இவங்க அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்குவாங்க நீங்க உட்காந்துக்குங்க என்றார். சரி என்று அவர் உள்ளே போனதும் சுமாவிடம் படிக்கட்டுகளை காட்டி இங்கே உட்காரலாமா என்றேன். அவர் திட்டப் போகிறார் என்றாள். திட்டினால் எழுந்து கொள்ளலாம் கம் ஆன் வாட் டூ யூ ஸே என்றேன். அவள் சரி என்றதும் இருவரும் மேல் படியில் அமர்ந்து கீழ் படியில் காலை வைத்துக் கொண்டோம். பிறகு புதிதாக தைத்து போட்டுக் கொண்ட பாவாடையை காட்டும் சிறுமியின் ஆவலோடு ஸ்ரீயை அழைத்துக் காட்டினேன். அவள் ஏய் நானு நானு என்றாள். வா என்றேன். அவள் வந்து எங்கள் இருவருக்கும் மத்தியில் அமர்ந்தாள். மூவரும் குதூகலித்தோம். வழியெல்லாம் நெல் பச்சை. நெல்லின் பால் மணம் நாசியை துழைத்தது. கண்களை மூடி உள்ளே இழுத்தேன். மனம் கவர் வாசனை என்னுள் பிரத்யேகமான இடத்தை தொடும். அது நானே என்னை அறியாத இடம். உடலின்ப உச்சத்திற்கு நிகரான ஒரு சுகானுபவத்தை இந்த வாசனை எனக்கு அளிக்கும். அது என்னை உருமாற்றி பூவுலகில் சாத்தியமே இல்லாத ஒரு இடத்திக்கு கொண்டு போகும். அப்படித்தான் இந்த விளைச்சல் மணத்தில் திளைத்துக் கொண்டிருந்தேன்.  
 
 
கங்கைகொண்ட சோழபுரத்தின் வரலாற்று சிறப்பென்ன என்று கேட்டது தான் தாமதம் ஸ்ரீ கங்கை கொண்டானின் பெருமையை எனக்கு அழுத்தி அழுத்தி வகுப்பெடுக்கத் துவங்கினாள். அசுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்த என்னிடம் எனக்கும் சொல்லு என்று சுமா கோர, ராஜேந்திர சோழனுக்கு பதில் ராஜ ராஜ சோழனை போட்டு நான் மொழி பெயர்க்க ஸ்ரீ நிறுத்து நிறுத்து என்றாள். அது சரி மகுடேஷ்வரி மிஸ், கிருபா மாம், செர்ரி மாம் எல்லாம் பல வருடங்களாக முயன்று தோற்றதை எல்லாம் இவள் ஒரே நாளில் எப்படி என்னுள் புகுத்த முடியும்? ஸ்ரீ இப்போது சுமா புறமாக திரும்பி ஆக்சுவலீ என்று ஆரம்பித்தாள். கேட்கும் சுவாரஸ்யத்தில் இருந்த சுமா பரவாயில்லை தமிழிலேயே சொல்லு புரியாத இடத்தில் மட்டும் கேட்கிறேன் என்றாள். சொல்லத் துவங்கிய அவள் நாம் சிற்பக் கலையில் சிறந்து விளங்கியது சோழர்கள் காலத்தில் தான் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அடைந்த புகழிலெல்லாம் சாந்தியடையாது சோழர்களின் ஆன்மா சுற்றிக் கொண்டிருந்திருந்தால் அன்றைக்கே மோட்சம் அடைந்திருக்கும். ஏனெனில் இடை இடையில் ஓ மை காட் ஐ லவ் சோழாஸ் என்று வேறு கூறிக் கொண்டாள். அவளுக்கு சாண்டில்யன் ஆதர்ஷம் என்பதையும் நான் இங்கே கூறிக் கொள்ள ஆசைப் படுகிறேன். சொல்ல சொல்ல திடீரென ஆவி இறங்கியது போல ஏய் நான் ஏற்கனவே இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இதை சோலீஸ்வரம் என்றும் கூறுவார்கள். நான் சொல்வது உண்மையானால் அந்தக் கோயில் முன் பெரிய புற்பரப்பு இருக்கும் என்றாள்.
 
 
இதற்குள் அடுத்த நிறுத்தம் வந்து இறங்குபவர்கள் இறங்கியதும் அந்த சீட்டில் நாங்கள் மூவரும் சென்று அமர்ந்தோம். அங்கே ஏறியவர்களிடம் டிக்கெட் கொடுக்க நடத்துனர் ஸீட் ஸீட் என்று வரவும் சுமா இங்கே ஸீட் என்று தான் சொல்கிறார்கள் இல்லையா என்றாள். ஆம் அங்கே என்ன சொல்வார்கள் என்றேன். அங்கே டிக்கெட் என்று சொல்வார்கள் என்றாள். பிறகு அவள் மோனத்தில் ஆழ எனக்கு பாட்டு கேட்கத் தோன்றியது. நானும் ஸ்ரீயும் இயர் போனை ஆளுக்கொரு காதில் மாட்டிக் கொண்டோம். இந்தப் பாட்டு கேட்டிருக்கியா என்று ‘ஒரு நதி, ஒரு பௌர்ணமி’ பாடலை அவளுக்கு கேட்பித்தேன். யேய் நல்லா இருக்கு என்றாள். எனக்கு அந்தப் பாட்டின் வரிகள் மிகப் பிடிக்கும். விஷுவல் செம மொக்கை, நித்யஸ்ரீ இன்னும் கொஞ்சம் நன்றாக பாடி இருக்கலாம் என்று தோன்றும். இது என் வரையில் என்னறிவு அவ்வளவே. 
 
ஒரு வழியாக கும்பகோணம் கூட்டு ரோடில் இறங்கி ஜெயம் கொண்டான் பஸ் பிடித்து கங்கைகொண்ட சோழபுரத்தில் இறங்க இரவும் எங்களோடேயே இறங்கத் துவங்கியது. சுற்றிலும் உயர்ந்த கட்டிடங்கள் எதுவும் இல்லாததால் இறங்கிய இடத்தில் இருந்தே அந்தக் கோயில் மிகப் பிரமாண்டமாக தெரிந்தது. உள்ளே நடந்து சென்று வாயிலுக்கு அருகில் இருந்த கடையில் பைகளை வைத்து, செருப்பை விட்டுவிட்டு உள்ளே நடந்தோம். புல் வெளியைப் பார்த்ததும் சொன்னேன் இல்லையா நான் இங்கே முன்னேயே வந்திருக்கிறேன் என்று என்றாள். கோவில் முன் வெள்ளைப் பூச்சில் நின்ற நந்தி ஓரளவுக்கு தெரிந்தது ஆனால் சிற்பங்கள் கண்களுக்கு புலப்படாத அளவுக்கு இருட்டி விட்டது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. பின்மாலைப் பொழுதின் பின்னணியில், ஒரு கோட்டையின் வாயிலைப் போல் இருந்த வாயில், பழைய கட்டிடம், விஸ்தாரமான இடம், ஜன நெருக்கடி அற்ற அமைதி, கட்டிடத்திற்கு அருகே சென்றதும் சன்னமாக கசிந்துகொண்டிருந்த வெம்மை என அந்தக் கோவிலை எனக்கு நிரம்பப் பிடித்தது. ஆனால் நேரம் துணை இருக்கவில்லை. அப்படியே புல் வெளியில் அமர்ந்தோம். நான் படுத்துக் கொண்டு ஓரிரு நிமிடங்கள் நட்சத்திரத்தை பார்த்திருந்தேன். முன்னொரு கால நிகழ்வுக்கு சாட்சியாய் நின்றிருக்கும் அதனுள் இருந்த என் மனநிலை ஒருகணம் எனக்கு அந்நியமாய் தோன்றியது. இன்னொருவரின் வீழ்ச்சியில் தங்கள் வெற்றிகளைக் கொண்டாடி இப்படியான கோட்டைகளை நிறுவிக் கொண்ட அக்கால மனிதர்களோடு என்னால் தொடர்பு படுத்தி பார்க்க முடியாவிட்டாலும், வசதிகள் குறைவாக இருந்தபோதிலும் இப்படி ஒன்றை அமைத்த அவர்களின் ஆற்றல் வியக்க வைத்தது. 
 
 
இனி என்ன செய்யலாம் என்றேன். இவ்வளவு தூரம் வந்துவிட்டு சரியாக பார்க்காமல் போனால் எப்படி என்றாள் சுமா. அப்படியானால் சரி தங்க இடம் கிடைக்குமா பார்க்கலாம் என்றேன். திடீரென இதோ இந்த இடமே நன்றாக இருக்கிறது உள்ளே இருட்டு வேறு நாம் இருப்பது யாருக்கும் தெரியப் போவதில்லை இங்கேயே தங்கிக் கொண்டால் என்ன என்றேன். 
 
 
-தொடரும்-

Tuesday, January 21, 2014

3. காஞ்சி முதல் காரைக்குடி வரை : விழுப்புரம்


சரணாலயத்திற்கு உள்ளே பார்க்க வருபவர்களை அமைதி காக்க வலியுறுத்தி ஆங்காங்கே பலகையில் எழுதி வைத்தால் என்ன என்று ஸ்ரீ திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தாள். உள்ளே இருந்து வெளியே வந்ததும், சுற்றுலா வருபவர்களின் இரைச்சல் அதிகமாக இருக்கிறதெனவும் அது பறவைகளுக்கு இடைஞ்சாலாகும் எனவே கொஞ்சம் உள்ளே செல்லும்போது அமைதி காக்க சொல்லக் கூடாதா என்று வாயிலில் நின்றிருந்த காவலர்களிடம் ஸ்ரீ வருத்ததுடன் சொன்னாள். நாங்க சொல்லிட்டே தான் இருக்கோம்மா ஆனாலும் எங்கம்மா கேக்கறாங்க என்றார்கள் அவர்கள். அவர்கள் சொல்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம் என்றாலும் உண்மையிலேயே ஏன் நமக்கு அந்த உணர்வே வருவதில்லை? இந்த நமக்கு என்பதில் நானும் தான் சேர்த்தி. வன விலங்குகளுக்கு இடைஞ்சல் எனத் தெரிந்தும், நண்பர்கள் சூழ சூழல் குறித்த பிரக்ஞை மரத்து, யாமம் வரை வனமதிர பேசி தீர்த்த சுயநலம் மிகுந்த அந்த நாள் என் நினைவில் ஆட நான் ஒன்றும் பேசாது அமைதியாக உடன் நடந்தேன்.

 

வாயிலுக்கு அருகில் ஒரு அம்மா சிறு சிறு பிடிகளாக பனங்கிழங்கை கட்டி வைத்திருந்தார். அதை தாண்டி வரிசையாக நிறைய பெட்டிக் கடைகள் இருந்தது. இங்கே பைனாகுலர் வாடகைக்கு கிடைக்கும் என்று சில கடைகளின் முன்னே எழுதி தொங்கவிட்டிருந்தார்கள். அடடா இதைப் பார்காம உள்ளே போய்ட்டமே என்று மூவரும் அசடு வழிந்தோம். தன்னிடம் இருந்த பைனாக்குலரை எடுத்து வரவில்லை என்று செல்வதற்கு முன்னேயே வருத்தப் பட்டுக் கொண்டிருந்த சுமா இப்போது இன்னும் அதிகமான வருத்தம் கொண்டாள். ஒரு கடையின் முன்பு இளநீர் குலைகள் வைக்கப்பட்டிருந்ததை பார்க்கவும் இளநீர் குடிக்கலாம் என்று சுமாவும் ஸ்ரீயும் அந்தப் பக்கம் போக நான் டீ குடிக்கிறேன் என்று எனக்கு நேராக இருந்த டீ கடைக்கு சென்றேன். கடைக்கு முன்னே சுக்கு டீ கிடைக்கும் என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. நான் அவரிடம் இஞ்சி டீ கிடைக்குமா என்றேன் அவர் ஆம் என்று தலையாட்ட ஒன்னு குடுங்க என்று வாங்கிக் குடித்தேன்.


குடித்துவிட்டு சிறிது தூரம் நடந்ததும் சற்று முன்னால் ஒரு அம்மா அப்பொழுதுதான் வடை சுடத் துவங்கி இருந்தார். வடை கண்ட இடத்தில் எல்லாம் சுமா ஸ்ரீ இருவரின் கால்களும் தாமாக நின்றுவிடும். அதாவது இனிப்பகத்தை கண்டால் அதிலேயே விழுந்துவிடும் என் கண்களைப் போல இவர்களை இழுப்பது வடை. இப்பொழுது என்ன செய்யப் போகிறார்கள் என்று அமைதியாக நோட்டம் விட்டேன். அருகே சென்றதும் இருவரும் தயங்கி தயங்கி நடந்தார்கள். பிறகு விலை என்ன என்று விசாரித்துவிட்டு வாங்காமல் முன்னே நடக்க ஏம்மா காலங்காத்தால விலை கேட்டுட்டு வாங்காம போகாதீங்க அப்புறம் இன்னிக்கு பூரா இப்படி தான் இருக்கும் வியாபாரமே நடக்காது என்றார். எண்ணெய் நல்லாதான் இருக்கு வாங்கிக்கலாம் சொல்லியபடி வடையை ஸ்ரீ வாங்கினாள். அம்மா உங்களுக்கு நல்லா வியாபாரம் ஆகனும்ன்னு தான் எனக்கும் ஆசை ஆனா நீங்க குடுத்த கை என்று சொல்லி நிறுத்தினேன். பாவம் அவர் நான் சொல்ல வந்ததை புரிந்துகொள்ளாமல் சந்தோசம் மா என்று முகம் பூரிக்க சொன்னார். நானும் அப்படியே மழுப்பி முன் நடக்க வடையின் சுவையில் ஸ்ரீ என்னை ஒன்றும் சொல்லாமல் வந்தாள்.


வடையை மென்றபடி அவர்களும், புகைப்படங்களை எடுத்தபடி நானும் நடந்து முன்னே வர ஒரு அழகான குடில் தென்பட்டது. மூவரையும் அது ஒரே நேரத்தில் ஈர்த்தது. பூட்டி இருந்த அதனருகே சென்று சுவற்றுக்கும் கூரைக்கும் இருந்த இடைவெளியில் உள்ளே ஆராய்ந்து விட்டு சில புகைப் படங்களை எடுத்தோம். அங்கே யார் தங்கி இருக்கிறார்கள் என்று அறியும் ஆவல் மிகுந்தது. நாங்கள் வெளியே வர ஒரு சிறுமி வாயிலில் நின்றிருந்தாள். அவளிடமிருந்து அவள் பக்கத்து வீட்டில் குடி இருப்பதாகவும் குடிலில் யாரும் தாங்குவதில்லை எனவும் அவ்வப்போது யாரேனும் வருவார்கள், சும்மா இணைப்புக்கு வேண்டி இதை அமைத்திருக்கிறார்கள் எனவும் அறிந்தோம்.

நின்று நிதானித்து நடந்து ஒரு வழியாக தங்குமிடம் அடைந்தோம். உள்ளே நுழைந்ததும் உணவு மேஜையின் மேல் தயாராக வைக்கப்பட்டிருந்த பொங்கல் மற்றும் இட்லியை வேகமாக உண்டு முடித்தோம். அறைக்கு சென்று ஹீட்டர் போட்டு முந்தின நாள் அழுக்கையும் சேர்த்து நன்றாக தேய்த்துக் குளித்து கிளம்பினோம். உண்மையில் வனத்துறை பங்களாக்கள் நன்றாக பராமாரிக்கப் படுகின்றன. இதை நாங்கள் கலக்காடு - முண்டந்துரையிலும் கண்டிருக்கிறோம். மூவரும் தயாரான பிறகு ஸ்ரீ எங்களுக்கு அங்கே தங்க அனுமதி அளித்த அதிகாரியை அழைத்து எல்லாம் சௌகரியமாக இருந்தது எனக் கூறி ஏற்பாடுகளை செய்தமைக்கு நன்றி தெரிவித்தாள். உதவியவர்க்கு நன்றி சொல்வது, எவர் வீட்டுக்கேனும் சென்றால் பாராட்ட விசயம் கிடைத்தால் தயங்காமல் அவர்களை பாராட்டுவது, சந்திப்பில் பிடித்தவர்களோடு திரும்பி சென்ற பிறகும் தொடர்பில் இருப்பது இதை எல்லாம் அவள் எப்போதும் மறக்காமல் செய்வாள். நான் அதற்கு நேர் எதிர். என்னிடம் சிலாகிப்புகள் மிக மிகக் குறைவு.அவள் பேசி முடித்ததும் கீழே வந்து எங்களுக்கு உதவியவரிடம் நாங்கள் கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும் அதற்கு இங்கே இருந்து எப்படி செல்ல வேண்டும் என கேட்க அவர் முதலில் மதுராந்தகம் செல்லும் படியும் அங்கே இருந்து விழுப்புரம் வண்டி கிடைக்கும், விழுப்புரம் சென்றால் கங்கை கொண்ட சோழபுரம் செல்லலாம் என்றார்.


தூக்கமுடியாமல் பைகளை தூக்கி முதுகில் சுமந்தபடி பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தோம். அன்று பயண நேரம் அதிகம் என்பதால் முன்னேயே பிஸ்கட் பாக்கெட் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று பேசி இருந்தோம். பெட்டிக் கடை கண்டதும் சுமா பிஸ்கட் பாக்கெட் ஒன்று வாங்க நினைவுறுத்தினாள். நான் கடையை பார்த்ததும் ஜாடியில் இருந்த தேன் மிட்டாய் என்னை ஈர்க்க நான் கடைப் பக்கம் செல்ல அவர்கள் பேருந்து நிறுத்தத்தை சென்றடைந்தார்கள். பிஸ்கட் பாக்கெட் வாங்கி விட்டு தேன் மிட்டாய் மூன்றையும் வாங்கினேன். அதற்குள் கூட்டு ரோடு செல்ல ஸ்ரீ ஒரு ஆட்டோவை பிடித்து விட்டு அங்கே இருந்து என்னை சைகையால் துரிதப் படுத்தினாள். நானும் விரைந்து சென்று ஏறிக் கொள்ள பதினைந்து ரூபாய் வாடகை என்றார். அது ஷேர் ஆட்டோ என்பதால் எங்களோடு இன்னும் ஒரு அம்மாவும் ஒரு சிறுமியும் பயணித்தனர். பயண வழியிலேயே நூறு ரூபாய்க்கு இதே ஆட்டோவில் மதுராந்தகம் செல்ல முடிவு செய்தோம்.


மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோக்காரரின் பரிந்துரைப்படி விழுப்புரம் பேருந்துக்கு காத்திருக்காமல் மேல்மருவத்தூர் பஸ் பிடித்தோம். மருவத்தூர் சென்று இறங்கி சில நிமிடங்களிலேயே விழுப்புரம் வழியாக ஏதோ தொலை தூர ஊருக்கு செல்லும் பஸ் கிடைக்க அதில் ஏறினோம். அரசு பேருந்தின் இருக்கைகள் அத்தனை வசதியாக இருக்கும் என அன்றே நான் உணர்ந்தேன். மனம் மிக உல்லாசாமாக இருந்தது. சிக்கென் பிரியாணி சாப்பிட்டால் தான் அன்றைய விரதப் பலன் கிடைக்கும் என்று ஸ்ரீ கறாராக சொல்லி விடவே விழுப்புர பேருந்து நிலையத்தில் இறங்கி அதற்கு எதிர்புறம் இருந்த அசைவ உணவகத்தில் நாங்கள் பிரியாணியும், சுமா ரசம் சோறும் சாப்பிட்டு வெளியே வந்தோம்.


வெளியே வந்ததும் ஸ்ரீ, தோள்பட்டை வலியைக் குறைக்க தான் ஒரு விசயம் கண்டுபிடித்திருப்பதாகவும் பையின் பளுவை கொஞ்சம் பின்புறத்தை தூக்கி அதற்கு ஷிஃப்ட் செய்து நடந்தால் சுமை அவ்வளவாக தெரியவில்லை என்று என் முன்னே நடந்து காண்பித்தாள். கொஞ்சம் போல நடந்து பின்பு என்னை திரும்பிப் பார்த்து பெருமிதத்துடன் எப்படி என்றாள். சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு செம்ம ஐடியா ஆனா என்ன நீ போன பிறகு அது ஒரு கிலோ மீட்டர்க்கு பின்னால வருது என்றேன். ஏய் நிஜமாவா என்று அவள் கேட்டு முடிக்கும் முன்னே இருவருக்கும் சிரிப்பு பீறிட்டு வந்ததில் என் கண்கள் ததும்பத் துவங்கி இருந்தது. பாஷை புரிந்ததோ என்னவோ சுமாவும் ஒரு ஓரமாக நின்று சிரித்துக் கொண்டிருந்தாள். அதுவரைக்குமான பயணமும் அனுபவமும் மிக நன்றாகவே இருந்தது.


திரும்பவும் பேருந்து நிலையம் வந்து கங்கை கொண்ட சோழபுரம் பஸ் குறித்து விசாரித்தால் முதலில் கும்பகோணம் கூட்டு ரோடு போக வேண்டும் என்று சொல்லி பிறகு அங்கே இருந்து கும்பகோணம் பேருந்தில் ஏறி ஜெயங்கொண்டான் கூட்டு ரோடில் இறங்கி அங்கே இருந்து கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும் என்றார்கள். கேட்கவே தலை சுற்றியது பிறகும் தொடர்ந்து எப்படியும் அங்கே செல்ல ஆறு மணி ஆகிவிடும் என்று தகவல் சொன்னவர்கள்  கூறவே எங்களுக்கு அன்று கங்கை கொண்ட சோழபுரம் பார்த்து விட்டு தாராசுரமும் பார்த்து வேதாராண்யம் போக முடியுமா என்ற சந்தேகம் வலுத்தது.
 
-தொடரும்-
 

 

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...