Monday, January 6, 2014

2. காஞ்சி முதல் காரைக்குடி வரை : வேடந்தாங்கல்

  வேடந்தாங்கல்

                               
பஸ்சை விட்டு இறங்கிய இடத்தில் ஒரே இருட்டு. கொஞ்ச தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தில் ஒரு கட்டிடம் இருந்தது புலப்பட்டது. விடுதி அதுவாகத்தான் இருக்கும் என அதை நோக்கி நாங்கள் கொஞ்சம் நடக்கத் துவங்கியதும் இரண்டு நாய்கள் எங்களை நோக்கி ஓடி வந்தன. அதைத்தவிர வேரு யாரும் தென்படவில்லை. உள்ளே கொஞ்சம் உதறத் துவங்கியது. அவற்றிடத்தில் எந்த நேய பாவமும் இருக்கவில்லை என்றாலும் அவை குரைக்காது எங்கள் மூவரையும் சுற்றி வந்தது. எங்களை என்ன செய்யலாம் என்று அவை குழம்பி ஒரு முடிவுக்கு வருவதற்குள் நாங்கள் கட்டிடத்தின் படிக்கட்டை எட்டிவிட்டோம்.

உள்ளே சென்ற போது இருவர் உணவு மேஜையில் அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு முன் பதிவு செய்திருந்த விசயத்தை சொன்னதும் அதில் ஒருவர் எங்களை மேலே அழைத்துக் கொண்டு suite II வை திறந்தார். அறை மிக சுத்தமாக இருந்தது. அறைக்குள் வந்து பைகளை வைத்தபோது மூவரும் நாள் முழுக்க சுற்றிய களைப்பில் இருந்ததால் ஹப்பா என்ற சிறு ஆசுவாச உணர்வுக்கு ஆட்பட்டோம்.  

ஸ்ரீ நாங்கள் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்த வனத்துறை அதிகாரியை கைபேசியில் அழைத்து காலையில் எத்தனை மணிக்கு சரணாலயம் திறக்கும், பறவைகளைப் பார்க்க எது சரியான நேரம் என்ற தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தாள். அறையை காட்டியவர் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்தபடி இருந்தார். வனத்துறை விடுதிகளில் எல்லா நேரங்களிலும் உணவு கிடைக்காதென்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததால் வாங்கிப் போயிருந்த ரொட்டியையும், பழத்தையும் சாப்பிட்டுக் கொண்டு அடுத்த நாள் காலை ஐந்தரை மணிக்கே சரணாலயத்திற்கு கிளம்பி விட வேண்டும் என்றும், நேரத்தில் போனால் தான் பறவைகள் உணவு எடுக்க போவதற்கு முன் பார்க்க முடியும் என்றும் பேசிக் கொண்டிருந்தோம்.  

பேச்சின் ஊடே சுமா வைக்கவே இடமில்லை இதை ஏந்தான் வாங்கினேனோ என்று கூறிக் கொண்டே காஞ்சிபுரத்தில் எடுத்திருந்த பட்டுப் புடவைகளை தன் தோள்ப் பையில் திணித்துக் கொண்டிருந்தாள். பயணத்திற்கு முன் தினம் என்னவோ நான் சுமாவை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருந்தாலும் காஞ்சிபுரத்தில் இறங்கியதிலிருந்து ஹச் ஹச் என்று தும்மிக் கொண்டிருந்தேன். வருடத்திற்கு ஒரு முறை பிடிக்கும் சளி என்னை இப்போது இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தது. மாத்திரைகளை முடிந்தவரை தவிர்ப்பேன் என்றாலும் இது இன்னும் ஒரு வாரத்திற்கு தொந்திரவு செய்யும் மேலும் இன்னும் நான்கு நாட்கள் பயணம் ஒன்றும் எளிதானதல்ல என்பதால் வேறு வழி இல்லாமல் மாத்திரையை போட்டுக் கொண்டேன். கண்களின் மேல் தூக்கம் நிழலாடியது. 

ஸ்ரீ நாங்கள் அன்றைக்கு சென்ற இடங்களை எல்லாம் தன் புத்தகத்தில் குறித்துக் கொண்டும், நாங்கள் செலவு செய்திருந்த கணக்குகளை எல்லாம் கையோடு வைத்திருந்த சின்ன நோட்டில் எழுதிக் கொண்டும் இருந்தாள். இந்தப் பயணம் துவங்கும் போதே எல்லா இடத்திலும் நான் செலவு செய்யவும் அவள் கணக்கு எழுதவும் யோசனை சொல்லி இருந்ததோடு மிக நேர்த்தியாக அதை செய்துக் கொண்டும் இருந்தாள். இப்படி எளிமையான இடத்தில் தங்கிக்கொண்டும், டவுன் பஸ்களில் பயணித்துக்கொண்டும் மேற்கொள்ளப்படும் பயணத்தின் மொத்த செலவு என்னவாக இருக்கும் என்று அறிகிற ஆவல் எங்கள் மூவருக்கும் இருந்தது.

 
29:12:2013 - வேடந்தாங்கல் 

ஸ்ரீயா, சுமாவா யார் முதலில் எழுந்தார்கள் என்று தெரியவில்லை, இருவரும் கிளம்பி விட்டு என்னை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். கதவு தட்டப்படவே திறந்தபோது முன்னிரவு உதவிகள் புரிந்த அந்த வனத்துறை ஊழியர் ஃப்லாஸ்க் நிறைய டீ யோடு நின்றிருந்தார். நானும் தயாராகி நாங்கள் கீழே இறங்கி வந்தபோது அதே அவர் தார் ரோட்டையே தொடருமாறும் அது முடியும் இடத்தில் வலப் பக்கம் திரும்பினால் சரணாலயம் என்றும் கூறி அனுப்பினார். வெளியே வந்தபோது பொழுது மெதுவாக விடிந்து கொண்டிருந்தது. நினைத்ததைப் போல குளிர் ஒன்றும் அவ்வளவாக தெரியவில்லை. அந்த இரண்டு நாய்கள் மீண்டும் எங்களை நோக்கி ஓடி வந்தது. எங்களை சுற்றி சுற்றி வந்தபடி எங்களை முன் நடத்தி சென்றது. சரணாலயம் விடுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.

வழியில் முதல் காட்சியாக விளைந்துகொண்டிருந்த நெல் வயலில் கொக்குகளை பார்த்தேன். அதன் பளீர் நிறம் நாளெல்லாம் மண் மேலேயே நின்றிருந்தாலும் இந்தக் கொக்குகளுக்கு மட்டும் எப்படி இத்தனை அப்பழுக்கில்லாத வெண்மை என்ற கேள்வியை எழுப்பியது. சரணாலாயத்திற்கு அருகில் சென்றபோது சுற்றுலா வருபவர்களின் வாகனங்கள் விரைந்து கடந்தது. உள்ளே சென்று அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டு நடந்தோம். அந்த காலை வேளையில் இரைச்சலை தவிர்க்க குழுவாக சுற்றுலா வந்திருப்பவர்களை வேகமாக கடந்து முன்னே நடந்து சென்றோம். நாய்கள் இன்னும் எங்களை தொடர்ந்தபடி இருந்தன. ஆனால் இப்போது என்ன பிரச்சனையோ அவை இரண்டும் ஒன்றைப் பார்த்து ஒன்று உறுமிக் கொண்டே வந்தன. 


அங்கே வரும் பறவைகளின் எச்சம் விழுந்த அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் அதிக மகசூல் கிடைப்பதை அறிந்த உள்ளூர் வாசிகள் அதை பல வருடங்களாக பாதுகாத்து வருவதாய் ஒரு தகவலை அங்கே படித்தேன். மேலும் அங்கே வரும் பல பறவைகள் எங்கே இருந்து வருகின்றன, எக்காலத்தில் கூடு கட்டும், எத்தனை முட்டைகள் இடும், அவை என்ன நிறத்தில் இருக்கும் என்பன போன்ற தகவல்களும் மற்றும் அதன் தமிழ் பெயர்கள் எல்லாம் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது.
அந்த ஏரியை சுற்றிலும் போடப்பட்டிருந்த பாதையில் கடைசிவரை நடந்தபோது இதற்கு மேல் அனுமதி இல்லை / உள்ளே செல்ல அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அதை கடந்து உள்ளே செல்ல ஆசை எழுந்தது. ஆனால் அடக்கிக் கொண்டு திரும்பி வந்து மூவரும் பறவைகள் நன்றாக தெரியக் கூடிய இடத்தை தெரிவு செய்து அமர்ந்தோம்.

Painted Stork மற்றும் Pelican கள் நிறைய இருந்தது. பறக்கும்போது மிகவும் பிரமாண்டமாக இருந்த Pelican, நீரில் இறங்கும்போது அத்தனை லாவகமாக சறுக்கிக்கொண்டு அமர்ந்ததை பார்த்தபோது சிலிர்த்து அடங்கியது. அத்தனை அற்புதமான ஜாலத்தை நடத்தியபிறகு அவை அசைபோடும் பசுவின் கண்களில் படரும் அமைதிக்கு ஒப்ப சலனமற்ற அமைதியோடு நீரின் மேலே மிதக்கத் துவங்கியது. மூவரும் ஒருவரோடு ஒருவர் எதையும் பேசிக் கொள்ளாமல் அப்படியே அரை மணிநேரம் அமர்ந்திருந்தோம். அன்று இரவுக்குள் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் சென்று பார்த்து பிறகு இரவு வேதாரண்யத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதால் மனதே இல்லாமல் அங்கே இருந்து கிளம்பினோம்.

-தொடரும்-

Friday, January 3, 2014

1. காஞ்சி முதல் காரைக்குடி வரை : காஞ்சிபுரம்

திருவாலங்காடு

புத்தாண்டை பெங்களூரிலிருந்து வெகு தூரம் ஓடிப்போய் வேறு எங்காவது கழிக்க வேண்டும் என்று 2013புத்தாண்டின் போதே முடிவு செய்திருந்தேன். போன மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீ என்னை அழைத்து நாம் தீர்மானமான திட்டம் எதுவும் இல்லாமல் இரண்டு வருடம் முன்பு KMTR (kalakad Mundanthurai Tiger Reserve) போனது போல மீண்டும் ஒரு பயணம் போகலாமா என்றாள். நானும் கிட்டத்தட்ட இரு வாரங்கள் வறண்ட மனநிலையோடு மாரடித்ததால் இலக்கில்லாத பயணத்தில் ஆர்வம் கொண்டு உடனே சரி என்றேன்.உடன் பணி புரியும் தோழி சுமாவும் புத்தாண்டுக்கு எங்காவது செல்லலாம் என்று சொல்லவே நாங்கள் மூவரும் சேர்ந்த இந்த ஐந்துநாள் பயணம் துவங்கியது. காஞ்சிபுரம்,திருவாலங்காடு, வேடந்தாங்கல், பிச்சாவரம், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம்,கோடியக்கரை(Point Calimere), முத்துப்பேட்டை, மனோரா, சித்தன்னவாசல், காரைக்குடி என்ற இடங்களை குறித்துக் கொண்டோம். 28 ந்‌ தேதி இரவு வேடந்தாங்கல் மற்றும் 30 ந்‌ தேதி இரவு Point Calimere வனத்துறை விருந்தினர் இல்லத்தில் தங்க முன் பதிவு செய்திருந்தோம். டிஸெம்பர் 31 இரவு காரைக்குடியில் நண்பரொருவர் எங்களுக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மூன்று இரவுகள் போக, எங்கேயும் தங்க ஏற்பாடு செய்யாது இருந்த 29ந்தேதி இரவை நாங்கள் இரவுப் பயணத்திற்கு என்று வைத்துக் கொண்டோம். பிறகு பயணத்திற்கு முற்றிலும் உள்ளூர் பேருந்துகளை பயன்படுத்த முடிவு செய்தோம். பயணத்தின் போது, நேரத்தைப் பொறுத்து இடங்களை கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம் என்றும் பேசிக் கொண்டோம்.


26 ம் தேதி சுமா தன் குடும்பத்துடன் மூன்று நாட்கள் பயணத்தில் இருப்பதாகவும் உடல் நிலை மிக மோசமாக இருப்பதால் தன் திட்டப்படி 27 ம் தேதி காலை பெங்களூர் திரும்ப முடியுமா என்பது சந்தேகம் என்றும் அப்படியே வந்தாலும் மோசமான உடல் நிலை காரணமாக அவள் எங்களுக்கு பாரமாகி விடுவாள் என்று ஐயுறுவதாகவும், எங்கள் உற்சாகத்தை அது குலைக்கும் என்றும் ஒரு (நீண்ட) குறுஞ்செய்தி அனுப்பினாள். உண்மையில் அவள் வர முடியாது போய் விடுமோ என்ற ஐயம் தான் என் உற்சாகத்தை குலைத்தது. உடனே நான் இப்படி ஒரு பயணம் இனி எப்போது என்று தெரியாது நான் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன் வா என்று பதிலனுப்பினேன். 27 ம் தேதி காலையிலிருந்து வந்துவிட்டாயா வந்ததும் எனக்குத் தெரிவி என்று அவ்வப்போது அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியபடி இருந்தேன். 9மணிக்கு வீடு திரும்பி பத்து மணிக்கு என்னோடு வந்து சேர்ந்து கொண்ட போது மிகவும் சோர்ந்து போய் இருந்தாள். ஸ்ரீ கோவை காந்திபுர ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து9 மணிக்கும், நானும் சுமாவும் பெங்களூர் சாந்தி நகர் பேருந்து நிலையத்திலிருந்து இரவு 10:15 KSRTC யிலும், 28 ந்தேதி காலை காஞ்சிபுரத்தில் சந்திக்க வேண்டி புறப்பட்டோம்.


28:12:2013


காலை 4 மணிக்கு நானும் சுமாவும் காஞ்சிபுரம் சென்று சேர்ந்தோம். ஸ்ரீ வர எப்படியும் இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் என்பதால் அதற்குள் எங்காவது சற்றே களைப்பாறவும், முதுகில் கனத்துக் கொண்டிருந்த பையை இறக்கி வைக்கவும் அறை கிடைக்குமா என்று பார்க்கலாம் என்று ஒரு ஆட்டோ பிடித்தோம். ஆட்டோக்காரர் நாங்கள் தங்குவதற்கு உகந்த தங்கும் விடுதிக்கு அழைத்துப் போவதாக கூறி அதற்கு முப்பது ரூபாய் கோர,நாங்களும் ஒப்புக்கொள்ள எங்களை ஏற்றிக் கொண்டார். தங்கும் விடுதியின் வரவேற்பறையில் வயதான பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். நாங்கள் தங்குவதற்கு ஒரு அறை கிடைக்குமா என்று அவரிடம் கேட்டு முடிக்கும் முன்னேயே இல்லை அறை எதுவும் காலி இல்லை என்றவர் ஒரு நிமிடம் பொறுத்து ஒரே ஒரு சின்ன அறை இருக்கிறது உங்களுக்கு சௌகரியப் படுமான்னு தெரியவில்லை என்றார். நாங்கள் போய் பார்க்கலாமா என்றேன். சரி போய் பாருங்க பிடிச்சிருந்தா தங்குங்க என்றவர் அறையை எங்களுக்கு காட்ட அங்கே பணி புரியும் ஒருவரை எங்களோடு அனுப்பி வைத்தார்.

அவர் அறையை திறந்ததும் ஒரே ஒரு ஒற்றைக் கட்டில் இருந்தது அதை தவிர ஒருவர் நடந்து போக வர சிறு இடம் இருந்தது. எப்படியும் இன்று இரவு இங்கே தங்கப் போவதில்லை குளிக்கவும், பைகளை வைக்கவும் தானே இதையே எடுத்துக் கொள்ளலாமா என்ற நினைப்பு உள்ளே ஓடியது. எங்கே காமன் பாத்‌ரூம் ஐக் காட்டுங்க என்றேன். வரிசையில் இருந்த கழிவறைகள் கொஞ்சம் மோசமாக இருந்தது. சுமாவை திரும்பிப் பார்க்க அவள் முகத்தில் ஒரு ஒவ்வாமை உணர்வு இருந்தது. என்ன பண்ணலாம் சொல்லு என்றேன். நாம அறை எடுக்கறதே பாத்‌ரூம்க்குத் தான் அதுவே மோசமா இருக்கு, தப்பா எடுத்துக்காத நம்ம வேற பக்கம் போலாமா என்றாள். நானும் மறு பேச்சு பேசாமல் சரி என்று கீழே வந்தேன். அந்தத் தாத்தாவிடம் அறை சின்னதாக இருக்கிறது நாங்கள் வேறெங்காவது கிடைக்கிறதா என்று பார்க்கிறோம் என்றேன். சரி பாருங்க என்றார். சுமா திரும்பவும் என்னிடம் ஸாரீ அந்த கழிவறையில் இருந்து ஒருவன் அப்படியே மேலேறிய உடையோடு வெளியே வந்தான் அதான் என்றாள். நான் கவனிக்கவில்லை பரவாயில்லை வா வேறு இடம் போகலாம் என்றேன்.


நான் ஸ்ரீயை அழைத்து அவள் காஞ்சிபுரம் வந்து சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்றேன். அவள் வர இன்னும் அறை மணி நேரம் ஆகும் எனவே அதற்குள்ளாக வேறு எங்காவது அறை கிடைக்குமா என்று பார்க்கிறேன் என்றேன் அவளிடம். தாத்தாவிற்கு என்ன தோன்றியதோ நீங்க வேணா இப்போதைக்கு அந்த அறையை எடுத்துக்கறீங்களாம்மா அப்றோமா மாத்திக் கொடுக்கறேன் என்றார். இல்லை நாங்க சாயங்காலம் கிளம்பறோம் அதுவரைக்கும் தான் வேணும் என்றேன்.எங்களை அழைத்து வந்த ஆட்டோக்காரர் இன்னமும் அங்கேயே இருந்தார். அவர் வேறு இடங்களுக்கு அழைத்துப் போவதாகவும் நாங்களே பார்த்து ஏதாவது அவருக்கு கொடுக்கவும் எனவும் கூறினார். விசாரித்த வேறு இரு இடங்களிலும் அறை கிடைக்காது போக, இங்கே ஜாஸ்த்தியாக இருக்கும் என்று சொல்லியபடி ஒரு மஹாலில் கொண்டு வந்து நிறுத்தினார்.

வெளி கேட்டை திறந்து கொண்டு அப்போதுதான் ஒரு வயதான மனிதர் வெளியே வந்தார். இங்கே தங்க அறை கிடைக்குமா என்றேன். முன் பதிவு செய்திருக்கிறீர்களா என்றார். இல்லை என்றேன்.அப்படின்னா அறை எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு நாங்கள் ஆட்டோவை திருப்பிய கணத்தில் எவ்ளோ நேரம் வேணும் என்றார். நாங்கள் மாலை காலி பண்ணிவிடுவோம் என சொல்ல ஒரே ஒரு அறை காலியாக இருக்கிறது பார்க்கிறீர்களா என்றார். நாங்கள் சரி எனவும் இருங்க வரேன் என்று உள்ளே சென்றார். நான் சுமாவை ஆட்டோவிலேயே இருக்க சொல்லி விட்டு அவரைப் பின் தொடர்ந்தேன். வரவேற்பறைக்கு அருகே இருந்த சோஃபாவில் ஒருவரும், தரையில் இன்னொருவரும் தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்கள். டேய் இந்நேரத்திக்கு இங்கே படுக்காதீங்க என்று சத்தமாய் எழுப்பினார். அவர்கள் எழாமல் வெறுமனே நெளிந்து இன்னும் குறுக்கிக் கொண்டு படுத்தார்கள். அப்போதுதான் பின்னே நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்தவர் எந்திருஞ்சு ரூமை காட்டுங்க என்று அவர்களிடம் சொன்னபடி என்னிடம் ஆயிரத்து இருநூறு ரூபாய் வாடகை என்றார். சரி ரூமை காட்டுங்க என்றேன். அதற்குள் சுமாவும் ஆட்டோவை அனுப்பிவிட்டு என் பின்னோடு வந்தாள்.

அரைத்தூக்கத்தில் எழுந்து வந்த பையன் எங்களை மேலே அழைத்துச் சென்றான். பின் திருமணங்களுக்கோ, பிற விசேஷங்களுக்கோ பயன்படுத்தக் கூடிய ஒரு பிரமாண்டமான ஹாலுக்குள் எங்களை நடத்திச் சென்றபோது எனக்கு லேசாகப் புரிந்தது. எங்களை நேராக மணமகன் அறைக்கு அழைத்து சென்றான், நான் மணமகன் அறை என்று வாய்விட்டுப் படித்தேன்.அப்டின்னா என்ன என்று வினவினாள் சுமா. groom's room என்றேன். ஐ தாட் சோ என்றவள் ஒரே நிமிடத்தில் என்ன ஒரு சாதுரியமான வியாபார யோசனை என்றாள். ஆம் என்று தலை அசைத்தேன். அது உள்ளே பூட்டி இருந்தது. திரும்பவும் சாவியை நுழைத்து இரு முறை அசைத்துப் பார்த்தவன் திறக்க முடியாது போகவே அதற்கு எதிர்ப்புறத்தில் இருந்த மணமகள் அறைக்கு அழைத்து சென்றான். அறையை அவர் திறந்து காண்பிக்கவும் மிக மோசமாக பராமரிக்கப் பட்டிருப்பது தெரிந்தது. வாடகையை குறைத்துக் கொள்வாரா என்று கேட்டேன்.நீங்கள் கீழே வந்து கேளுங்க என்றான். அன்றைக்கு ஏதோ கூட்டம் நடைபெறுவதால் அங்கே உள்ள எல்லா ஹோட்டேல்களும் புக் ஆகி விட்டதாகக் கூறினான். மோசமான அறையாக இருந்தாலும் திரும்பவும் அலைய முடியாது என்பதால் அதையே எடுத்துக் கொள்ள முடிவு செய்து கீழிறங்கி வந்தோம். அவரிடம் என்ன பேசியும் அவர் மசியவில்லை முழுத் தொகையையும் கொடுத்துவிட்டு அறைக்குப் போக சொன்னார். நான் கொடுத்ததும் அவர் ரசீது எதுவும் கொடுக்கவில்லை, எங்கே கேட்டால் காலி பண்ண சொல்லி விடுவாரோ என்று ஒன்று பேசாது மேலேறி வந்தோம். அறைக்குள் நுழைந்ததும் ஸ்ரீ அழைத்தாள். அப்படியே ஒரு ஆட்டோ பிடித்து மஹாலுக்கு வந்து மேலே மணமகள் அறைக்கு வர சொன்னேன். அதை சொல்லும்போது எனக்கு ஏனோ சிரிப்பாக வந்தது. பேசியபடியே நிமிர அங்கே வைத்திருந்த பீரோவின் மேல் கரப்பான் பூச்சி ஒன்று மீசையை சுற்றிக் கொண்டு மேலேறிக் கொண்டிருந்தது.

ஸ்ரீ வந்ததும் மூவரும் கிளம்பி திருவாலங்காடு சென்றோம்.அங்கே இருந்த ஒருவர் அதன் வரலாற்று சிறப்பை சொல்லிக் கொண்டிருந்தார்.

கோவிலுக்கு அருகிலிருந்த ஒருவீட்டின் வெளியே அண்ணா அவர்களின் கழுத்தில் கட்டப்பட்டு ஒரு ஆடு நின்று கொண்டிருந்தது.
 

ஒரு சில வீட்டு வாசலில் கோலமும் பூசணிப் பூவும் வைக்கப் பட்டிருந்தது. கோவிலுக்கு பின்னாலிருந்த நீர்நிலை படிக்கட்டில் சற்றும் நேரம் அமர்ந்து மௌனித்தோம்.

பிறகு திரும்பவும் காஞ்சிபுரம் வந்து முக்கியமாக பார்க்க நினைத்திருந்த காஞ்சி குடிலுக்குப் போனோம்.
 
காஞ்சி குடில் விவசாய சமூகத்தை சேர்ந்த வெள்ளாள குடும்பத்தின் பழைய வீடு. அந்தக் காலத்தில் பயன்படுத்திய தொட்டில், சமையல் சாமான்கள், தூக்குப் போசி முதலான பெரும்பாலான சாமான்களை பாதுகாத்து வைத்திருந்தார்கள். காஞ்சி குடில் மனதைக் கவர்ந்தது. கிணற்றிலிருந்து நீர் இறைத்து வெகு காலம் ஆகி இருந்ததால் அங்கே கிணற்றில் நீர் இறைக்கலாமா என்று கேட்டேன். அந்த வீட்டை பராமரித்துக் கொண்டிருந்தவர் சரி எனவும் பித்தளைக் குடத்தை உள்ளே விட்டு தண்ணீர் எடுத்தேன்.

பிறகு வேக வேகமாக கைலாசநாதர் கோவில் மற்றும் சகுந்தலா ஜெகன்நாத் ம்யூஸீயம் பார்த்துவிட்டு அறைக்கு வந்து காலி செய்து விட்டு வேடந்தாங்கல் செல்ல கிளம்பினோம். ம்யூஸீயத்தில் நாட்டுப்புற இசைக் கருவிகளை பாதுகாத்து வைத்திருந்தார்கள். அவர்கள் பூட்டும் நேரம் ஆகிவிட்டதால் சரியாக முழுவதையும் பார்க்க முடியவில்லை என்றாலும் யாழைப் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. 

காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் பஸ் பிடித்தோம். என்னருகே அமர்ந்து இருந்த பெண்மணி என்னோடு பேச்சுக் கொடுத்தபடியே வந்தார். பஸ் மக்கள் கூட்டத்தில் திணறிக் கொண்டே ஓடியது. தினமும் இப்படிதான் இருக்குமா என்றேன். ஆமா மாலை நேரத்தில் இப்படி இருக்கும் என்றார். அவர் இறங்கும்போது வாங்க வீட்டுக்கு என்று புன்னகைத்தார்.

உத்திரமேரூர் வந்து உத்திரமேரூரிலிருந்து பஸ் பிடித்து புழுதிவாக்கம் வந்திறங்கி அங்கே இருந்த பானிபூரி கடை தம்பதியரிடம் அங்கே இருந்துவேடாந்தாங்கலுக்கு செல்லும் பஸ் எப்போது வரும் என்று கேட்டோம். இப்போதானே போச்சு இன்னொரு பஸ் வரும் காத்திருங்க என்றார்கள். பஸ் வந்ததும் ஏறினோம் அவ்வளவு கூட்டம் இல்லை ஆனால் பஸ் முழுக்க எங்களையே கவனித்தபடி இருந்தது. எங்கே இறங்க வேண்டும் என்று நடத்துனரிடம் கேட்க அவர் சரியான பதிலை சொல்லவில்லை. நேரடியாக விசாரிக்க முடியாமல் ஒன்றிரண்டு பேர் என்னடா ஆராய்ச்சி பண்ணப் போறாங்களா என்று சத்தமாக வினவும் தோரணையிலும் தங்களுக்குள்ளுமாக பேசிக் கொண்டார்கள். பஸ்ஸில் இருந்த ஒன்றிரண்டு பெண்கள் அக்கறையாக எங்களுக்கு இறங்க வேண்டிய இடத்துக்கான தகவலை சொல்லிவிட்டு பத்திரமாக செல்லும்படி அறிவுறுத்தினார்கள். நாங்கள் விடுதியில் இறங்கியபோது மணி இரவு ஒன்பது ஆகி இருந்தது.

 


-தொடரும்-

 

 

Monday, November 11, 2013

எ திங் ஆஃப் ப்யூட்டீ

ஜன்னலருகே நாற்காலியை இழுத்துப் போட்டு வெளியே பார்த்தான். வெட்டப்பட்ட கிளையில் அமர்ந்திருந்த காகம் விடாமல் கரைந்தது. வெளிக்காட்சிகளில் ஒன்றும் மனம் நிலைக்கவில்லை. நள்ளிரவில் துவங்கி மிச்ச இரவை விழுங்கிய அந்தக் கனவை, எவ்வளவு முயன்றும் தன் நினைவிலிருந்து துரத்த முடியவில்லை. அந்தக் கனவு மேலும் மேலும் சிறு வயதிலிருந்து தான் துரத்த விரும்பிய பிற எல்லாக் கனவுகளையும் எழுப்பிக் கொண்டு வந்து இந்த நாளை ஒரு துர் நாளாக்கியது. தான் செல்ல அஞ்சும் பாதையைப் பற்றி விரைந்தது எண்ணம். அதன் வேகமும், உறுதியும் இவனை குலைக்க அவன் வேறொரு ஆளாக மாறிக் கொண்டிருப்பதாய் உணர்ந்தான். கைகள் நடுங்க இப்போது இந்தத் தனிமை ஆபத்தானதென உணர்ந்தான். ஏதோ உணர்வு தூண்ட எழுந்து வேக வேகமாக உடைகளை அகற்றி மூலையில் எறிந்தான்.

அறையின் அடுத்த மூலையிலிருந்த கண்ணாடியில் தெரிந்த தன் நிர்வாணத்தை பார்த்தான். பின் தன்னையே குனிந்து ஒரு முறை பார்த்துக் கொண்டான். இரண்டும் வேறு வேறு உருவைக் காட்டியது. இரண்டும் ஒன்றுதான் என்றாலும் கூட பார்வையின் கோணம் வேறுபாடு காட்டிற்று. மீண்டும் மீண்டும் குனிவதும் நிமிர்வதுமாய் தன்னை மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தான். அச்செயல் அவன் நினைத்ததைப் போல அவனை அவன் மனப் பிடியிலிருந்து தளர்த்தவில்லை. மாறாக அவ்விரண்டு காட்சியும் மேலும் எண்ணத்தை தூண்டி சிக்கலை இறுக்கியது. யாருமற்ற அறையில் தன்னை உணர்ந்த துணை வேண்டி கண்ணாடியை தெரிவு செய்தது எத்தனை பெரிய முட்டாள் தனம் என்று தன்னையே நொந்துகொண்டான். சிக்கல்கள், சிக்கல்கள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டு அங்கிருந்து விலக திரும்புகையில் கால் சுண்டு விரல் மேஜையின் விளிம்பில் இடித்துக் கொண்டது. ஸ்ஸ்ஸ் என்று ஒரு முறை கண்களை இறுக மூடி பல்லைக் கடித்தான். ஃபக் யூ என்று முணுமுணுக்கத் துவங்கி பட் ஐ கான்ட் என்று தேய்ந்தான்.
 
தான் இவ்வுலகின் வேண்டப்படாத உயிரினமாக, மிகவும் பலகீனமானவனாக உணர்ந்தான். இல்லை இல்லை இதிலிருந்து என்னை நான்தான் தப்புவிக்க வேண்டும், ஒரு பக்கம் உணர்வு மனம் சொல்ல அறையை சுற்றி நடக்கத் துவங்கினான். மொசைக் தரையின் பெட்டிகளுக்குள் கரங்களுக்கு முட்டாமல் எட்டு வைத்து நடை பழகினான். சில விநாடிகளுக்குப் பிறகு இழுபட்டவனாக மீண்டும் கண்ணாடியின் முன் வந்து நின்றான். தன் பிம்பத்தையே உற்றுப் பார்த்தான். கண்ணாடியின் காட்சிக்குள் தற்போது எதிர் சுவற்றிலிருந்த இரண்டு பல்லிகளின் பிம்பமும் விழுந்தது. ஒன்று வாலை வளைத்துக் கொண்டு மற்றொன்றை துரத்தியது. துரத்தியபடியே இரண்டும் காட்சியிலிருந்து அகன்றது. அவனும் அகன்று கழிவறைக்குள் நுழைந்தான். வெளியே வந்த அவன் மீண்டும் உடையை எடுத்து அணிந்து கொண்டான். அறையை பூட்டிக் கொண்டு வெளியேறினான்.
 
அவள் என்ன செய்வதெனத் தெரியாமல் சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள். அந்த ஒற்றையடிப் பாதை அதோடு முடிந்து பெரும் வெளி முன் விரிந்தது. அது நீர் வற்றிய ஏரி என்பதை அவள் சற்று தாமதமாக உணர்ந்தாள். தூரத்தில் எருமைக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. நடுவில் ஒரு பாறை மல்லாந்து வெயில் காய்ந்து கொண்டிருந்தது. சரியாக சொல்லப் போனால் அது ஒரு பாறை அல்ல, ஒரு பாறைக் குடும்பம் அல்லது கூட்டம். தான் தனியாக வண்டியை எடுத்துக் கொண்டு இவ்வளவு தூரம் வந்திருக்கக் கூடாதோ என்று ஒரு கணம் நினைத்தாள். மறு கணம் டு ஹெல் வித் ஸேஃப்டீ, திஸ் இஸ் ஜஸ்ட் பர்ஃபெக்ட் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். தான் கிடாரை பயிற்சி செய்ய இதைவிட சரியான இடம் இருக்க முடியாது என்று நம்பினாள். வண்டியை நிறுத்திப் பூட்டிக் கொண்டு அந்தப் பாறையை நோக்கி நடந்தாள். அருகே செல்ல பாறையில் முளைத்திருந்த செடிகள் மறைத்திருந்த அவன் தெரிந்தான். அதுவரை இருந்த அவள் உற்சாகம் வருந்தியது.
 
தொடர்ந்து செல்லலாமா வேண்டாமா என்று யோசித்து நின்றாள். அவன் மேய்ந்து கொண்டிருந்த எருமைகளையே பார்த்தபடி இருந்தான். ஒரு முடிவுக்கு வந்தவளாக பாறையை நோக்கி மீண்டும் நடந்தாள். அருகே சென்றதும் உங்களின் ஏகாந்தத்தை குலைக்கும் எந்த எண்ணத்தோடும் நான் இங்கு வரவில்லை என்றாள். அவன் பதிலேதும் சொல்லாமல் அவளை ஒரு முறை திரும்பிப் பார்த்து பின் திரும்பவும் எருமைகளை மேய்ந்தான். அவனின் மௌனம் அவளுக்கு ஒரு அசௌகரியத்தை கொடுக்கவே அவள் தூரத்தில் இருந்த மேட்டை நோக்கி நடந்தாள். மறைந்து கொண்டிருந்த சூரியனை நோக்கி நடக்க கண்கள் கூசியது. மேட்டின் மேலேறி மாட்டி இருந்த கிடாரைக் கழற்றிக் கீழே வைத்தாள். அங்கே இருந்து சரிவை நோக்கி வேகமாக கீழே ஓடி வந்தாள். பின் திரும்பவும் மேலேறினாள். திரும்பவும் சறுக்கினாள்.
 
இப்படியாக விளையாடிக் கொண்டிருந்தவளை அவன் பார்த்தபடி இருந்தான். அவளை பார்க்க பார்க்க மன இறுக்கம் சற்றே தளர்ந்தாற் போல் இருந்தது. இந்த குழந்தை மனநிலை தனக்கும் வாய்த்திருந்தால் வாழ்க்கை எத்தனை எளிதாய் இருந்திருக்கும் என நினைத்தான். அப்போது ரம்மியமான மணிச் சத்தம் கேட்கவே திரும்பி பார்த்தான். அப்போது தான், தான் இவ்வளவு நேரம் அருகே இருந்த அந்த சர்ச்சை கவனிக்காமல் இருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தான். கூடவே அறையை பூட்டிக் கொண்டு கால் போன போக்கில் நடந்து வந்து இங்கே அமர்ந்திருக்கும் பிரக்ஞை வந்தது. மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த சர்ச் வெகு உயரமாக மிக கம்பீரமாக நின்றிருந்தது. அதை ஒட்டி அதே போல வடிவமைப்புடன் வேறு சில கட்டிடங்களும் இருந்தது. ஒரு வேளை ஏதாவது கிரிஸ்துவ கல்வி நிலையமாக இருக்கலாம் என்று நினைத்தான். வெள்ளையும், ராயல் ப்ளூவும் பூசப் பட்டிருந்த அந்த சர்ச்சும் பிற கட்டிடங்களும் அந்த இடத்திற்கு பூரணத்தை தருவித்தது. பிறகு அந்த மணி ஓசையோ அவன் இதுவரை கேட்டிறாத இனிமையில் ஒலித்தது. இது எல்லாம் சேர்ந்து தன்னை மீட்டெடுத்ததாய் உணர்ந்தான். எ திங் ஆஃப் ப்யூட்டீ என கீட்ஸை நினைத்துக் கொண்டான்.
 
அப்போது அவள் அவனை கடந்து போய்க் கொண்டிருந்தாள். தெரிந்தவளைப் போல அவளிடம் கிடார் வாசிக்க தெரியுமா என்றான். அவள் கற்றுக் கொண்டிருக்கிறேன் பயிற்சி செய்யவே இங்கு வந்தேன் என்றாள். பயிற்சி செய்யுங்கள் நான் கிளம்புகிறேன் என்றான். நீங்கள் இங்கே இருப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை என்று அருகே அமர்ந்தாள். எருமைகள் மேய்ந்தபடி கிட்டே நெருங்கி இருந்தன. அதைப் பார்த்த அவள், இந்த எருமைக் கூட்டத்தைப் பார்க்க அந்நியன் நினைவு வருகிறதா உங்களுக்கும் என்றாள். தொடர்ந்து அவளே பயந்து விடாதீர்கள் விலக்கப்பட்ட எல்லாத் தவறுகளையுமே நான் செய்திருக்கிறேன் அதனால் மிதித்துக் கொல்லப்படப் போவது நான் தான் என சிரித்தாள். நானும் ஒன்னும் குறைந்தவனல்ல என்றான். ஓ அப்போ நம்ம சேர்ந்து சாகப் போறோமா என்றாள். ஆறு மணிக்கு திரும்பவும் சர்ச்சின் மணி ஒலித்தது.

 இந்த ஓசை மனசை என்னவோ பண்ணுதில்ல என்றாள். ம்ம் என தலை அசைத்தான். சில விநாடிகள் இருவரும் ஒன்றுமே பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். உணர்வு வந்தவளாக அவள், மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கடந்து போயிருந்த எருமைகளை சுட்டினாள். இருவரும் இணைந்து சிரித்தனர். அபூர்வமாக இப்படி ஒரு நாள் அமைந்து விடுகிறதில்லையா என்றாள்.  அவன் அண்ணாந்து வானத்தை பார்த்தான். வானத்தில் மைனாக் கூட்டம் சேர்ந்தும் கலைந்தும் ஜாலங்களை நிகழ்த்தியது. அவன் பார்வையை தொடர்ந்து மேலே பார்த்து,  வாவ் Murmuration என்றாள். எ திங் ஆஃப் ப்யூட்டீ என்று அவன் துவங்க, அவள் இஸ் எ ஜாய் ஃபாரெவர் என்று முடித்தாள்.

Sunday, September 15, 2013

மூக்கி

பல அடுக்குகள் அல்லது திரைகளை உதிர்த்து நின்ற ஆத்மாவின் அசலான நிர்வாணத்தை நான் நேற்றுப்  பார்த்தேன். 'மூக்கி' அத்தனை அற்புதமான கூத்து (Theatrical Dance Performance). எத்தனயோ முறை பார்க்க நினைத்தும் முடியாமல் நேற்று தான் காணக் கிடைத்தது. அது நடை பெற்ற இடம் 'valley School'. எத்தனையோ முறை போக நினைத்தும் நேற்று தான் அங்கேயும் முதன் முதலாக சென்றேன். மூக்கி ஆறரை மணிக்குதான் என்றாலும் valley இயற்கை சூழலில் அமைந்திருந்ததால் கொஞ்சம் முன்னாடியே செல்லலாம் என்று நானும் என் தோழிகளும் ஐந்து மணிக்கு அங்கே சென்று சேர்ந்தோம். அந்த வில்டர்‌நெஸ் (Wilderness) என்னை அப்படியே உள்ளே வாங்கிக் கொண்டது. சுற்றி பார்த்தபடி வந்தபோது சற்று முன்னாக நடந்திருந்த என் தோழி Open Theatre யின் கடைசிப் படியில் அமர்ந்தபடி யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தாள். நான் என்னுடன் நடந்து வந்த இன்னொரு தோழியிடம் அவங்கள பாக்க எங்க அம்மா மாதிரியே இருக்காங்க என்றேன். பக்கத்தில் போனதும் தான் முகம் அம்மாவைப் போல் இல்லை என்று தெரிந்தது. தூரத்தில் இருந்து பார்த்தபோது அவர்களின் நரைத்த முடி எனக்கு அப்படி தோண செய்திருக்கலாம். தோழி எங்களுக்கு அவரை நளினி என்று அறிமுகப் படுத்தியதும் அவர் எங்களைப் பார்த்து புன்னகைத்தார். அவர் முகத்தில் தான் எத்தனை கனிவு என்று நினைத்துக் கொண்டேன். சில விநாடிகள் பேசிக் கொண்டிருந்துவிட்டு நீங்கள் மூன்று மணிக்கு கிளம்பியது அல்லவா நான் உங்களுக்கு எதுவுமே கொடுக்க வில்லையே மேலே செல்லுங்கள் அங்கே பழம் இருக்கும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அவர் மூ..ன்று மணிக்கு என்று சொல்லும்போது தொனித்த புரிதலும், பரிவும் அவர் கையை பற்றிக் கொண்டு அம்மா என்று மடியில் தலை சாய்த்திருக்கலாம். பிறகு அவர் கீழே இருந்த மண் பாதையை சுட்டிக் காட்டி நீங்க அது வழியாக நடந்தால் study center போகலாம் பார்பதானால் பார்த்து விட்டு வாருங்கள் என்றார். நாங்கள் மூவரும் விடைபெற்று கீழே இறங்கினோம்.


ஆறு மணிக்கு நடனம் நடை பெரும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அது ஒரு சிறு குடில். அதன் படிகளில் இடப்பட்டிருந்த கோலமும் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த எண்ணைய் தீபங்களும் விரிக்கப்பட்டிருந்த பாயும், நிகழ்ச்சிக்கென குடிலின் ஒரு பக்கத்தை மறைத்துக் கட்டியிருந்த மேரூன் பார்டர் கொண்ட கருப்பு பருத்தி சேலையும் இருள் கவிழ கவிழ பூரண அழகில் மிளிர்ந்தது. விரிக்கப்பட்டிருந்த பாயில் வரிசையாக அமர்ந்து நாங்கள் 'மூக்கி' பார்க்க தயாரானோம். மூக்கி ஒரு நாடக நடனம். 'மூக்கி' என்றால் கன்னடத்தில் ஊமை என்று பொருள். தாகூரின் 'சுபா' என்ற ஊமைப்பெண் சிறுகதை தான் அதன் உள்ளுயிர்ப்பு. என்றாலும் அதில் நடித்தவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களையும் உள்ளிழைத்திருந்தார்கள்.
ஒரு மணி நேரம் மிக உணர்வுபூர்வமாகக் கடந்தது. பங்கு பெற்ற ஐந்து பேரும், ஒரு கட்டத்தில் கன்னடத்திலும், தமிழிலும், ஹிந்தியிலும் 'எனக்கு பேச்சு வராது, என்னால பேச முடியாது, அதனால் ஜனங்க நினைச்சுக்கறாங்க எனக்கு உணர்வுகளே இல்லை' மாறி மாறி சொன்னார்கள். மனம் அங்கேயே நின்று கனத்தது. மிக சொற்பமான சொற்கள் ஆனால் அதன் உள் இருக்கும் உணர்வுகள் எத்தனை எத்தனை. நடன அசைவுகளிலும் இது தான் சாரம். இதன் மூலம் அவர்கள் சொல்ல வந்தது, பேச்சு வராதது ஊமைக்கு மட்டுமே இல்லை என்பது, உரத்த குரல்களின் இரைச்சலில் மென் குரல்கள் அமிழ்ந்து போய் விடுகிறதென்பது, சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் வரையறைக்குள் அல்லது ஏற்றுக்கொள்ளும் உறவுகளுக்குள் வந்துவிடாத 'Gay' ஒருவரின் கொந்தளிப்புகள் எப்படியிருக்கும் என்பது, ஒருவருக்கு பேச்சு திக்குவது  அவரின் குறை அல்ல அதை கேட்கும் அளவு பொறுமை கூட இல்லாதது நம் குறையே என்று சுட்டுவது, பின் மௌனியான இயற்கை எனக்கு வலிக்கிறது என பல வேளைகளில் சொல்லியும் நாம் கண்டுகொள்ளாமல் கடந்து விடுவது, இப்படி இன்னும் நிறைய நிறைய. நிகழ்ச்சியின் முடிவில் அவர்கள் ஐவரும் தங்கள் சொந்த வாழ்வோடு எப்படி இதை தொடர்பு படுத்திக் கொள்கிறார்கள் என்று பகிர்ந்து கொண்ட போது மூக்கி இன்னும் அர்த்தம் பொதிந்ததாக ஆனது. எனக்கு மட்டும் தமிழ் இன்னும் நன்றாக தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கலாம்.

நானும் மூக்கியை மிக நெருக்கமாக உணர்ந்தேன்.என் போதாமைகளை, இயலாமைகளை இன்னும் இன்னும் என்னுள் புரளும் கேள்விகளை இவ்வுலகுக்கு விளங்கும்படி எப்படி சொல்வேன்? என்கிற ஆயாசம் மிகும் தினங்களில் நான் ஊமை ஆகி விடுகிறேன். என்னை தனிமை படுத்திக் கொள்கிறேன். ஆனால் உள்ளே பொங்கும் கொந்தளிப்புகளை நான் என்ன செய்வேன்? என்னுள்ளே அடைத்துக் கொண்டதெல்லாம் 'மூக்கி' யைப் பார்த்துக் கொண்டிருந்தபோது வெளிவந்தது. நான் அழுதேன்.  எனக்கு மற்றவர் முன் அழுவது பிடிக்காது, பிறகு அவர்கள் கேலிக்கு உள்ளாவதும். அதனாலயே நான் படங்களை தனித்துப் பார்க்க விரும்புவேன். ஆனால் நேற்றோ என்னை சுற்றிலும் அமர்ந்திருந்த யாரையும் பொருட்படுத்தாது அழுதேன். விழிகள் பொங்கி பொங்கி துளிகள் கன்னங்களில் உருண்ட படி இருந்தன. எங்கே என் கேவல் எல்லோருக்கும் கேட்டு விடுமோ என்று ஒரு கட்டத்தில் பயந்து என் முன் வரிசையில் அமர்ந்திருந்த என் தோழியின் முதுகை தொட்டு ஐ யாம் நாட் ஏபில் டு கன்ட்ரோல் என்றேன். அவள் தன் கைப்பையில் இருந்த கைக்குட்டையை எடுத்து என்னிடத்தில் கொடுத்து விட்டு என் கால்களை மெதுவாக தட்டிக் கொடுத்தாள். அது மேலும் என்னை கரைத்து நான் தலை கவிழ்ந்து அழுதேன். அந்த அழுகை அப்போதைக்கு என்னை மீட்டது என்றாலும் என்னால் இன்னும் மூக்கியிலிருந்து வெளிவர முடியவில்லை. பங்குபெற்றவர்களில் ஒருவரான பூர்ணிமா நடனம் முழுக்க இசைத்த அ அஆ அஆ ஆஆ வை தான் மனம் இன்னும் பாடிக் கொண்டிருக்கிறது.

Monday, September 2, 2013

ஒரு நாளும், நீயும் - நானும்



உன்னிடம் இப்படி என் நாட்களையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதில் எத்தனை நிறைவு தெரியுமா? நேற்று ஒரு முழுமையான நாள், மதியம் 'நீரின்றி அமையாது உலகு' என்பதை வலியுறுத்தி, அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து குழந்தைகளுக்கு உணர்த்தவென திரையிடப்பட்ட படங்களைக் காண  ‘குழந்தைகள் திரைப்பட விழா’விற்கு (Water Film Festival)  சென்றேன். அதில் 1984 ல் வெளியான 'Hen in a Boat' (Flußfahrt mit Huhn) என்ற ஜர்மன் படம் திரையிடப் பட்டது.




 
நீர் சேமிப்பை பற்றிய வெளிப்படையான வலியுறுத்தல்கள் இல்லை என்றாலும், நீர்நிலைகள் மாசுபடுதலுக்கான காரணிகள் குறித்த சில ஸட்டிலான காட்சிகள் இருந்தன. ரோபேர்டின் திட்டப்படி ஜோஹன்னா என்ற சிறுமி உட்பட 4  குழந்தைகள், ராபர்ட் ஜோஹன்னாவின் தாத்தாவை ஏமாற்றிவிட்டு அவரின் படகை எடுத்துக் கொண்டு, ஆற்றின்  வழி  கடலைச் சேரும் பாதையை கண்டுபிடிக்க மேற்கொள்ளும் சாகசப் பயணம் தான் இந்த படம். கடலின் துர்சக்திகளிடமிருந்து தங்களை ஒரு கோழி பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு கோழியையும் படகில் கொண்டு செல்கிறார்கள். அவர்களோடு ஒன்றரை மணி நேரம் மீண்டும் குழந்தையானேன்.

பிறகு மாலை 'Short + Sweet Dance Festival' finale க்கு சென்றேன். Ballet, Hindustani/classical, Flamenco போன்ற பல நடன வடிவங்களை பயிற்சி செய்யும் நடனருக்கான போட்டி. ஒரு பத்து பர்ஃபார்மென்ஸ் இருந்தது.பத்து  நிமிடங்களுக்குட்பட்ட எல்லாமே நன்றாக இருந்தது. இருந்தாலும், அதில் எனக்கு ஸோலோ பர்ஃபார்மென்ஸ் இரண்டு மிகப் பிடித்தது. ஒருவன், மனவளர்ச்சி குன்றியவரின் உலகை பிரதிபலிக்கும் வகையில் மனம் பிறழ்ந்தவர்களின் சிதைந்த உணர்வுகளை முகத்திலும், அவர்களின் குலைந்த அசைவுகளை டான்ஸிலும் தத்ரூபமாக வெளிக்கொண்டு வந்தான். இன்னொருத்தி, கட்டுக்கடங்காத உணர்வுகளை, கொந்தளிப்பை, இயலாமையை, அலைக்கழியும் மனத்தை, ஐயோ! அத்தனை அற்புதமாக வெளிப்படுத்தினாள். நான் இதை மிக நெருக்கமாக உணர்ந்தேன். நீர் மட்டுமா, நம்மைப் போன்றவர்களுக்கு கலை தான் எத்தனை ஆறுதல்?

நீ 'Groundhog Day' படம் பார்த்திருக்கிறாயா? இப்போது அந்தப் படத்தைப் பற்றி உன்னிடம் ஒன்றும் பேசப் போவதில்லை. ஒரே நாள் திரும்ப திரும்ப வருகிறது என்ற இந்த எண்ணம் மனதில் வந்தபோது அந்தப் படமும் நினைவில் வந்தது. அதாவது ஒரே நாளையே திரும்ப திரும்ப எந்த வித விரக்தியும், வெறுப்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களை பற்றி நீ என்ன நினைக்கிறாய்? உணர்வைக் கூட விடு ஒரே நாளையே வருடக் கணக்கில் வாழ்கிறோம் என்ற புரிதலே இல்லாமல் இருக்கும் இவர்கள் நம் மனச் சிக்கல்களை  எல்லாம் எப்படி புரிவார்கள்? நான் இவர்களிடம் மனதின் முதல் தளத்தில் நின்றுகொண்டுதான் பேசுகிறேன். மேல் தளத்தில் நின்று கொண்டு ஆன்மாவின் பேச்சை எப்படி பேச முடியும்? இவர்களோடு உன்னாலும் என்னாலும் பொருந்த முடிவதில்லை. 

இன்று உன்னிடம் பேசிக் கொண்டிருந்த போது நீ காரணம் அறியா வெறுப்புணர்வில் இருப்பதாக சொன்னாய். இன்றைக்கு நீ பார்த்த மனிதர்களை எல்லாம் சபித்தாய். எல்லாவற்றிலிருந்தும் பெரும் விடுதலையை நாடினாய். அதற்கு மேல் எதுவும் நீ விளக்காமலே அந்த உணர்வை நான் நன்கறிந்தேன்.அந்தக் கணம் மானசீகமாய் உன் தலை முடிகளை கோதினேன். உஷ்ணத்தில் வியர்திருந்த உன் உச்சந்தலையை விரல் நுனிகளால் அழுந்தத் துடைத்தேன். கண்ணா, உன் மூர்க்கங்களை சாந்திக்கும் வழியறிவேன் - என் மடியில் இளைப்பாறுவாய் வா! ஆழ முத்தத்தில் உன் கசப்புகளையும் வெறுப்புகளையும் உறிஞ்சி, உனை நான் மீட்பேன்!

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...