Wednesday, June 12, 2013

தமிழ்க் கன்னடத்தி

இன்று என் டீமில் புதிதாக சேர்ந்திருக்கும் நவீன் எந்த ஊர் என்று என்னைக் கேட்டான். மைசூர்காரனான அவனுக்கு ஊர்ப் பெயரை சொன்னால் புரியாது என்று தமிழ்நாடு என்று சொன்னேன். ஓ நான் நீங்கள் பெங்களூரை சார்ந்தவர் என்று நினைத்தேன் என்றான். இல்லை என்று சொன்னாலும் எனக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. நான் பெங்களூர் வந்து ஒன்பதுவருடம் முடியப்போகிறது. ஒரே ஊரில் ஒன்பது வருடம் இருந்தது இதுவே முதல் முறை. அப்பாவோடு தர்க்கித்துதான் வேலை தேட பெங்களூர் வந்தேன். அப்போது என்னோட முதுகலை  படித்திருந்த ஒரே தோழி இன்போசிஸ்ல் வேலை செய்து கொண்டிருந்தாள். அவளோடு அவள் தங்கி இருந்த விடுதியில் சேர்ந்து கொள்வதாக திட்டம். அப்பாதான் அழைத்து வந்து விட்டார். என்னை விடுதியில் சேர்த்து விட்டு, ஒன்னு விட்ட சொந்தம் ஒரு அண்ணாவின் வீட்டுக்கு திரும்பி போய்  விட்டார். அது ஒரு ஜூலை மாதம் மழை நன்றாக பெய்து கொண்டிருந்தது. அப்பா கிளம்பியதும் என்னுடைய வீம்பு எல்லாம் காணாமல் போனது. அப்பாவுக்கு தொலைபேசி  அழைத்து அழத் தொடங்கினேன். அப்போதே வந்து திரும்ப கூட்டிப் போகிறேன் என்றார். இல்லை நான் ஒரு மாதம் இருந்து பார்கிறேன் என்றேன்.

முதலில் பெங்களூர் மிரட்சியாக இருந்தது. புரியாத மொழி நர பர என்று காதினில் விழுந்தது.தீவிர முயற்சியின் காரணமாக எப்படியோ முட்டி மோதி ஒரு மாதத்திற்கு பிறகு வேலை கிடைத்தது. முதல் நாள் டீமில் எல்லோரையும் அறிமுகப் படுத்தினார்கள். அங்கே இருந்த ஒவ்வொருவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருந்தது. கொஞ்சம் நடுக்கமாக இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. சுமாவை அறிமுகப் படுத்தியபோது அத்தனை பரவசமாக இருந்தது. அப்படியே தமிழ் முகம். நீங்கள் எந்த ஊர் என்று திரும்பத் திரும்பக் கேட்டேன். பெங்களூர் என்று சொன்னார்கள். இல்லை நான் உங்கள் நேடிவ்வைக் கேட்கிறேன் என்றேன். பெங்களூர் தான் என்று அவர்கள் திரும்பவும் சொல்ல, இன்னொருவர் நான் ஏன் கேட்கிறேன் என்பதை சரியாக புரிந்து கொண்டு அவங்க தமிழ்நாடு இல்லே என்றார். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பெங்களூர் வந்த புதிதில்  தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேசன் வண்டியைப் பார்த்தாலே மனம் குதூகலமாகும். எங்கேயாவது தமிழ் பேச்சுக் கேட்டால் அவ்வளவு சந்தோசமா இருக்கும்.

சுமாதான் எனக்கு சீனியராக இருந்தாள். சேர்ந்த ஒரு வாரத்திலேயே ஏதோ ஒரு விசயத்தில் சுமாவோடு மனஸ்தாபம் ஏற்பட்டது. பிறகு அது சரியாகி எந்தப் புள்ளியில் தோழிகளானோம் என்று தெரியவில்லை. அவளின் மற்ற தோழிகளோடு முதல் பயணமாக பிலிகிரிரங்கசாமி மலைக்கு சென்றேன். அவர்கள் கன்னடத்திலேயே பேசிக் கொண்டிருந்ததால் வேறு வழி இல்லாமல் எனக்கு நானே கன்னடத்தை பரீட்சயமாக்கிக் கொண்டேன். அவர்கள் பேசப் பேச  ஒவ்வொரு வார்த்தையையும் தமிழ் படுத்தி புரிந்து கொண்டே வந்ததால் தலை வலி மண்டையைப் பிளந்தது. ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தேன். எப்போது என்று தெரியவில்லை பெங்களூரை பிடிக்கத் துவங்கி விட்டது. அதற்கு முக்கியமான காரணம் முதல் காதலாக இருக்கலாம். நடந்த தெரு, சென்ற கோயில், அமர்ந்த பூங்கா என ஒவ்வொன்றும் செண்டி ஆகி விட்டது. பிறகு இங்கே கிடைத்த மட்டற்ற சுதந்திரம். இன்னாரின் பெண் என்றோ, இந்த ஊர் என்றோ,  இன்ன பேர் என்றோ யாருக்கும் தெரியாது. யாரும் எதையும் கண்டு கொள்ளவும் இல்லை. அதுவரை ஒட்டிக் கொண்டிருந்த அடையாளங்கள் உதிர்ந்து போனது எனக்கு மிக வசதியாக இருந்தது.

இதோ ஜூலை 11 வந்தால், இங்கே வந்து சரியாக ஒன்பது வருடங்கள் முடிந்து விடும். இதுவரை கொஞ்சம் பேச மட்டுமே கற்றுக் கொண்டிருந்த கன்னடம், இப்போது ஓரளவிற்கு படிக்கும்  அளவுக்கு வந்திருக்கிறது. இதற்கு காரணம் சாகர் ஹசே அங்கிள். அவருக்கு தமிழ் கற்க மாளாத ஆசை. போன வருடம் நான் அங்கே போயிருந்த போது அவர் தான் அ ஆ இ ஈ வரிசை (ಅ ಆ ಇ ಈ ) சொல்லிக் கொடுத்தார். இந்த வருடம் சென்றபோது ஓரளவிற்கு படிக்க முடிகிறது என்று அவர் மேசை மேல் இருந்த கன்னடப் புத்தகத்தின் தலைப்பை வாசித்துக் காட்டினேன். பரவால்லையே நீ தமிழ்க் கன்னடத்தி என்றார். எனக்கு சட்டென அந்தப் பெயர் பிடித்துப் போனது. ஒரு வேளை அவர் ஆசைப் படி அவரின் படைப்புகளை என்னால் தமிழில் மொழி பெயர்க்க முடிந்தால் இந்தப் பெயரை வைத்துக் கொள்ளலாம் என்றேன் சுமாவிடம்.

எனக்கு கன்னடம் மட்டுமல்ல எல்லா மொழியையும் கற்றுக் கொள்ள ஆசையாய் இருக்கிறது. ஏதாவது ஒரு மொழியிலாவது உணர்வுக்கு மிக மிக நெருக்கமான வார்த்தைகளை கண்டு கொள்ள முடியாதா என்ற பேராவல். தற்போது சுமா தன்னுடைய அக்கா மகன் தாய் மொழியாம் கன்னடம் படிக்க வில்லை மாறாக ஹிந்தி படிக்கிறான் என்று வருந்துகிறாள். அதற்கு ஏன் வருந்துகிறாய் என்று கேட்கிறேன், பிறகு தாய் மொழி அழிந்து விடாதா என்கிறாள். அழிந்தால் என்ன என்ற கேள்விக்கு கன்னம் சிவக்க பிறகு எப்படி அவர்கள் நம் கலாச்சாரம், நம் பண்பு எல்லாம் எப்படி கற்றுக் கொள்ள முடியும் என்கிறாள். கற்றுக் கொள்ளாவிட்டால் தான் என்ன என்கிறேன்? தொடர்ந்து கலாச்சாரத்தை, சமூகத்தை குப்பையில் போட அன்பு மட்டுமே நித்தியம்,அதை எந்த மொழியில் செய்தால் தான் என்ன என்கிறேன்.மொழியின் தேவை புரிகிறது, மொழிப் பற்றுதான் புரியவில்லை. 

7 comments:

பா.ராஜாராம் said...

//பெங்களூர் வந்த புதிதில் தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேசன் வண்டியைப் பார்த்தாலே மனம் குதூகலமாகும். எங்கேயாவது தமிழ் பேச்சுக் கேட்டால் அவ்வளவு சந்தோசமா இருக்கும்//


//அதற்கு முக்கியமான காரணம் முதல் காதலாக இருக்கலாம். நடந்த தெரு, சென்ற கோயில், அமர்ந்த பூங்கா என ஒவ்வொன்றும் செண்டி ஆகி விட்டது. பிறகு இங்கே கிடைத்த மட்டற்ற சுதந்திரம். இன்னாரின் பெண் என்றோ, இந்த ஊர் என்றோ, இன்ன பேர் என்றோ யாருக்கும் தெரியாது. யாரும் எதையும் கண்டு கொள்ளவும் இல்லை. அதுவரை ஒட்டிக் கொண்டிருந்த அடையாளங்கள் உதிர்ந்து போனது எனக்கு மிக வசதியாக இருந்தது//


//ஏதாவது ஒரு மொழியிலாவது உணர்வுக்கு மிக மிக நெருக்கமான வார்த்தைகளை கண்டு கொள்ள முடியாதா என்ற பேராவல்//


//தொடர்ந்து கலாச்சாரத்தை, சமூகத்தை குப்பையில் போட அன்பு மட்டுமே நித்தியம்,அதை எந்த மொழியில் செய்தால் தான் என்ன என்கிறேன்.மொழியின் தேவை புரிகிறது, மொழிப் பற்றுதான் புரியவில்லை//


அருமை!


rajasundararajan said...

பார்ப்பனர் பாரீஸில் போய் சோற்றுக்கு அலையலாம். பறையருக்கு அது பிரச்சனை இல்லை. பறையர் = தமிழர். இதைப் புரிந்துகொள்ள நாம் திருக்குறளை மட்டுமல்ல, திருமூலர் & நம்மாழ்வாரையும் புரிந்திருக்க வேண்டும்.

வேளாண் சமூகம் ஒழிந்து முதலாளித்துவம் பரவவேண்டியதே சாதிகள் ஒழிந்துபட ஒரு வாய்ப்பு என்பது எனக்கும் புரிகிறது, ஆனால்...

Sugirtha said...

நன்றி பா.ரா! :)

@rajasundararajan முதலாளித்துவத்தில் எப்படி சாதிகள் ஒழியும்? புதிதாக முளைக்காதா?

shri Prajna said...

"தொடர்ந்து கலாச்சாரத்தை, சமூகத்தை குப்பையில் போட அன்பு மட்டுமே நித்தியம்,அதை எந்த மொழியில் செய்தால் தான் என்ன என்கிறேன்.மொழியின் தேவை புரிகிறது, மொழிப் பற்றுதான் புரியவில்லை." ரொம்ப நல்லா எழுதிருக்கே “தமிழ் கன்னடத்தி”...எனக்கும் இந்தப்பேர் பிடிச்சிருக்கு...

Sugirtha said...

தாங்க்யூ சின்னானி :)

Li. said...

"மொழியின் தேவை புரிகிறது, மொழிப் பற்றுதான் புரியவில்லை." என்பது, 'அன்பு புரிகிறது, பாசம்தான் புரியவில்லை ' என்பது போல் உள்ளது இனியா. :-)

எப்பொழுதும் போல் அழகான கட்டுரை..

Sugirtha said...

அப்டி இருக்கா Li? பாசம்ன்னா என்ன?

:-)