Thursday, February 3, 2011

முதல் கடிதம்

மனு,

நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்லையா? அது நிஜம் தானா? மாயை அல்லவா? உன்னால் தற்போது வேலையில் கவனம் செலுத்த முடிகிறதா? என் ஞாபகங்களை விலக்க முடிகிறதா? மறுபடியும் கேட்கிறேன் மனு நீ எப்படி இருக்கிறாய்?

இந்த நடு நிசியில் உனக்கு முதல் கடிதம் எழுதுகிறேன் மனு. எனக்கு என்னைப் பற்றிய நிறைய குழப்பங்கள் இருக்கிறது. எனக்கு நிறைய வேளைகளில் என்னை சமாளிப்பது கடினமாய் இருக்கிறது. அப்படியான நேரங்களில் நான் எவரையும் பார்க்க தவிர்க்கிறேன். என்னால் மனமுவந்து அளவளாவ முடியாமல் போய் விடுகிறது. என் எதையும் அடுத்தவர் மேல் திணிப்பதை நான் விரும்புவதில்லை. இந்த குழப்ப மனநிலையும் தான். குழப்பம் என்பதை விட ஒரு உறுமும் மனநிலை. எதற்கென்றே தெரியாமல் கோவம், எதையாவது போட்டு உடைக்கும் மனநிலை.அப்போது யாராவது என்னை தொந்தரவு செய்யும்போது நான் அவர்களை மிகவும் காயப் படுத்துகிறேன். அதுவும் நெருக்கமானவர்கள் என்றால் ஐ டேக் தெம் பார் கிராண்டட். அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையை குத்தி விட்டது போல் அவர்கள் மேல் பொழிந்து விடுகிறேன். பிறகு மிகவும் வருந்துகிறேன். அன்று நமக்குள் நடந்ததற்கு இதை ஒரு விளக்கமாக கூட கொடுக்க முடியவில்லை என்னால். ஆனால் நான் வருந்துகிறேன் மனு.

தனியாக இருக்க நான் பிரியப் படுகிறேன். ஐ ஆம் எ வெரி குட் கம்பானியன் பார் மைசெல்ப். இப்போது எனக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. நினைத்த பாட்டை கேட்டுக் கொண்டு, ஆடத் தோன்றினால் ஆடிக் கொண்டு, படித்துக் கொண்டு இப்படி தோன்றியதை எல்லாம் செய்து கொண்டு எல்லாம் முடிந்த பிறகு மனம் எதையோ நாடுகிறது. அது நீதான் மனு. என்னை யாரும் மிக நெருங்கி வந்தால் எனக்கு ஒரு வித பாதுகாப்பின்மை தோன்றுகிறது. திஸ் இஸ் யுவர் லிமிட் என்று சொல்கிறேன். ஆனால் உன்னிடம் அப்படி இல்லை மனு. நீ விலகி சென்றால் நெருக்கம் வேண்டுகிறேன். நீ ஏன் சொல்லாமலே சென்று விட்டாய் மனு? எது உன்னை மிக பாதித்தது?

சில சமயங்களில் ஐ ஆம் ஸெல்ப் ஒப்செஸ்ட் என்று தோன்றுகிறது மனு. என்னை நான் பார்த்து கொண்டே இருப்பது எனக்கு அவசியமாகிறது. என் மனநிலை தொடர்ந்து ஒரே மாதிரி இருப்பதில்லை. உதாரணதிற்கு, இந்த வாழ்க்கையை ஒரு உடை மாற்றும் லாவகத்துடன் கழைந்திட முடிந்தாலோ, தொடர் ஓட்ட பொருளாக யாரிடமாவது கை மாற்ற முடிந்தாலோ எத்தனை நன்றாக இருக்கும் யோசித்து கொண்டே இருக்கிறேன். பின் நீ நினைவில் மிதக்கிறாய். வாழ்க்கையே மாறினார்போல உனக்கு சொல்கிறேன். இந்த வாழ்கை தான் எத்தனை சுவாரஷ்யங்களை உள்ளடக்கி இருக்கிறது மனு. ரோஜாக்களின் அடுக்கு இதழ்களை பாரேன். எத்தனை நேர்த்தி, எத்தனை அழகு. இந்த வெயில், இந்த பூக்களின் சுகந்தம் எல்லாம் எல்லாம் என்ன அதிசயம் இல்லையா மனு என்கிறேன். இதில் எதை நான் என்பது. இது தான் நான் என்று ஒரு வகையில் நம்பிக் கொண்டே வருகையில் அந்த நானுக்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒரு செயலை செய்கிறேன். ஒரு கட்டத்தில் மிகுந்த சோர்வுற்று என்னையே நான் கை விட்டு விடுகிறேன். இந்த நானை இரு காதுகளைப் பிடித்து எங்கேயாவது தூக்கி வீசி விடலாம் போல் இருக்கிறது மனு.

நீ எனக்கு மிக முக்கியம் மனு. எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட நீ என்னொடு இருக்கவே பிரியப் படுகிறேன் மனு. இது கூட எனக்கு சுய நலமாகவே படுகிறது. என் நம்பிக்கையின்மையை உன் மேல் திணிக்கிறேனோ? ஒரு நிலையற்றவளோடு நீ எப்படி இருப்பாய் மனு? ஆனாலும் எனக்கு நீ வேண்டும் மனு. உன்னோடு இருக்கும்போது எனக்கு எல்லாமே கிடைத்து விட்டது போல் இருக்கிறது. உன்னை இழுத்துக் கொண்டு ஏதாவது ஒரு காட்டுக்குள் போய் விடனும் போல் கூட இருக்கும். அதெல்லாம் முடியாது எனும்போது ஒருவித சலிப்பு வருகிறது. சலிப்பென்ற உணர்வு ஒருவர் இடம் கொடுப்பதற்கு முன்னேயே வந்து ஆக்கிரமித்து கொள்கிறது. இங்கிதமென்று எதுவுமில்லை அதனிடம்.

நீ இல்லாத இந்த சமயங்களில் நாம் பேசிகொண்டிருந்த போது, சிதறியிருந்த உரையாடல் துணுக்குகளை உண்டே என் நேரம் செல்கிறது மனு. என்னால் எதுவுமே செய்ய முடிய வில்லை மனு. புது இடத்துக்கு சென்று விடலாம் என்று தோன்றினால் கூட எத்தனை நாளைக்கு ஓட முடியும் என்றே தோன்றுகிறது. நான் என்ன செய்யட்டும் மனு? இப்படி யோசித்து யோசித்து நான் சிதறிக் கொண்டிருக்கிறேன் மனு. இதையெல்லாம் படித்துவிட்டு நீ என் மேல் பரிதாபப் படாதே. நீ எனக்கு இடம் கொடுக்காதே மனு. நான் காற்றிலாடும் கொடி, நீ இடம் கொடுத்தால் இறுகப் பற்றிகொள்வேன். உனக்கு மூச்சு முட்டும். எனக்கு அன்பை எந்த இடத்தில் நிறுத்துவது தெரியாது? அதற்கு பெயரெல்லாம் கிடையாது. எல்லா கோடுகளையும் அழித்து விட்டு, திசை காட்டிகளை கழற்றி விட்டு நடப்பதே எனக்கு சௌகர்யம். உனக்கு எந்த உத்திரவாதமும் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. உன் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இல்லை.

காதலின் இதயம் நீ மனு. உன்னை காதலிக்கிறேன் மனு.

27 comments:

Kannan said...

என்ன சொல்லுறதுன்னு தெரியலங்க...உங்க எழுத்து மனச என்னவோ பண்ணுதுங்க..!!
keep going.!!

Sugirtha said...

நன்றிங்க கண்ணன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

santhanakrishnan said...

கடிதம் முழுவதும்
காதல் உருகி ஓடுகிறது.

இந்த வாழ்க்கையை ஒரு உடை மாற்றும் லாவகத்துடன் கழைந்திட முடிந்தாலோ, தொடர் ஓட்ட பொருளாக யாரிடமாவது கை மாற்ற முடிந்தாலோ எத்தனை நன்றாக இருக்கும் .

ஆசையை இவ்வளவு
லாவகமாகச் சொன்னதற்காக
ஒரு பூங்கொத்து.

Sugirtha said...

நன்றிங்க சந்தானகிருஷ்ணன் கருத்துக்கும், பூங்கொத்துக்கும்!

உயிரோடை said...

//சிதறியிருந்த உரையாடல் துணுக்குகளை உண்டே என் நேரம் செல்கிறது //

சிறிதி கிடக்கும் கவிதைத்துளிகளில் ஒரு துணுக்கு.

இயல்பாக இருக்கனும் என்பதற்காக ஆங்கிலம் கலப்பிலாது போல தோன்றினாலும் ஆங்கிலமே இல்லாமல் எழுத முடிந்தாலும் பேசவும் முயற்சி செய்வோமே.

Sugirtha said...

ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுத சொல்கிறீர்களா? முயற்சிக்கிறேன் லாவண்யா..நன்றி...

பா.ராஜாராம் said...

ப்ரபாவும் நீங்களும் ஒண்ணுதான்னு தோணுது சுகிர்தா. இதை இன்று ப்ரபாவிடம் பகிர்ந்து கொண்டேன். :-)

தளத்தில் உள்ள எல்லா கவிதைகளையும் வாசித்தேன். வாசிக்க செய்துவிட்டீர்கள்.

graet! go ahead!

Sugirtha said...

அப்டியா?!!! ப்ரபா மாதிரி நானா? என்ன சொல்றதுன்னே தெரியல...எவ்ளோ பெரிய காம்ப்ளிமென்ட் :-) உங்கள் வார்த்தைகளில் நெகிழ்ந்து போனேன்... நன்றிங்க பா.ரா. :-)

க ரா said...

Fantastic writting..

Sugirtha said...

Thank you

Gowripriya said...

எழுதிய அன்றே படித்தேன்.. மனது என்னவோ போலிருந்தது..
ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை..

Sugirtha said...

ம்ம் ... நன்றி கௌரி!

ராகவன் said...

அன்பு சுகிர்தா,

கடிதமா... இல்லை மனசா சுகிர்தா.... உறவு எத்தனை சுகமா இருக்கு... உறவும் அதன் நினைப்பும்... நினைப்பை சூழ்ந்த மனசும்... எல்லோருமே இது போல தான் சுகிர்தா... இதை மனுவுக்கு அனுப்பாமலும் இருந்து விடலாம்... அனுப்பாமல் இருந்தால் சொல்லாததை எப்படி ஆகும்? ஆனாலும் எல்லாம் சொல்லிவிட்டு ஒரு நிறைவு வந்துவிடுகிறது... எழுதி முடிக்கும்போது... எல்லாவற்றையும் மனசுக்கு நெருக்கமான நம்மிடமே நாம் பேசிக்கொள்வது போல... எத்தனை அழகான ஒரு சுய அலசல்...
ஒரு அழகான இறகு...

அன்புடன்
ராகவன்

Sugirtha said...

எத்தனை முறை உங்கள் கமெண்ட்டைப் படித்தேன் தெரியவில்லை ராகவன், அத்தனை அழகாய் உங்க உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்...

//எழுதி முடிக்கும்போது... எல்லாவற்றையும் மனசுக்கு நெருக்கமான நம்மிடமே நாம் பேசிக்கொள்வது போல... // ம்ம் நிச்சயமாய்! நன்றி...

Pranavam Ravikumar said...

Good Show..! You wonderfully explained what is eternal love.. Wishes.

sakthi said...

பிரபா இந்த பதிவை படிக்க சொன்னபோதே புரிந்தது........... மனம் நெகிழ வைத்த முதல் கடிதம்......

Sugirtha said...

@ Ravikumar - Thanks so much Ravi!

@ Sakthi - உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி. பிரபாவுக்கும் நன்றி....

அன்பேசிவம் said...

சுகிர்தா,
கிட்டதட்ட அரைக்கிணறு தாண்டிவிட்டேன். அத்தனை பதிவுகளுக்கும் பின்னூட்டமிட முடியவில்லை. ஒரு சின்ன வருத்தம், உங்கள் பதிவுகளை இவ்வளவு நாட்களாய் தவறவிட்டதில்.

எல்லோருக்குமே இதைப்போல ஒரு மனமுண்டு. அஞ்சல் செய்யாத எல்லா கடிதங்கங்களுக்குப் பின்னும் இதைப்போல ஒரு மனமும், ஒரு மனுவும் காரணமாய் இருக்கத்தான் செய்கிறார்கள்(கிறது)

முதல் கடிதத்தை வாசித்து முடிக்கும்போது கடந்தகாலத்தை வலிய திருப்பிப்பார்க்கிறேன். நன்றி சுகிர்தா.

Sugirtha said...

முரளி,

நீங்கள் சொல்வதைப் போல எல்லோருக்குள்ளும் இப்படியான மனம் இருக்கிறது. அநேகக் கடிதங்கள் ஆழ் மனதுள் புதைந்துதான் கிடக்கின்றன, எங்காவது இப்படி படிக்கும்போது அவை மேலெழுந்து வருகிறது. பாருங்கள் இப்போது என் கடிதம் உங்கள் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

உங்கள் முதல் வருகைக்கும், உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி! :)

நேசமித்ரன் said...

ஞாபகப் பதுமைகளில் விரல் சிதைந்த தொப்பி உடைந்தவற்றின் மீதான ஈர்ப்பு
எப்பவும் அலாதியே ...!

தொலைந்த எம் பிம்பங்களில் இந்த விழைந்த தனிமையும் ,பித்தேற்றிய பிரியமும் சுய அலைவும் நினைந்தூறவும் நெகிழ்ந்து சொல்லவுமாய் இப்பவும் இருக்கிறது

மிக திருப்தியாய் இருந்து கொண்டிருப்பதாய் பாவனை செய்து கொண்டே நிரப்பிக் கொள்ள அன்பை யாசிக்கிறது வாழ்வு

தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துகள்

Sugirtha said...

நேசமித்திரன்,

//ஞாபகப் பதுமைகளில் விரல் சிதைந்த தொப்பி உடைந்தவற்றின் மீதான ஈர்ப்பு
எப்பவும் அலாதியே ...!//

ம்ம்..

//தொலைந்த எம் பிம்பங்களில் இந்த விழைந்த தனிமையும், பித்தேற்றிய பிரியமும் சுய அலைவும் நினைந்தூறவும் நெகிழ்ந்து சொல்லவுமாய் இப்பவும் இருக்கிறது//

எத்தனை சொன்னாலும் எப்போதும் தீர்ந்து போகாததுதான் இல்லையா?

//மிக திருப்தியாய் இருந்து கொண்டிருப்பதாய் பாவனை செய்து கொண்டே நிரப்பிக் கொள்ள அன்பை யாசிக்கிறது வாழ்வு//

எத்தனை அருமையாய் சொல்லி இருக்கிறீர்கள் நேசமித்திரன் வாழ்வின் ஆழ்-நீழ் தேடலை,ஒற்றை வரியில்...

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

thamizhparavai said...

உங்கள் தளத்திற்கு என் முதல் வருகை. ப்ளாக்கர் டேஷ்போர்டில், ஏன் இப்பதிவைத் தேர்ந்தெடுத்தேனென்று தெரியவில்லை. கடலலையில் கை நுழைத்தவுடன் சிப்பி கிடைத்ததொரு உணர்வு.
கடிதம் ரசித்தேன்...
//இந்த வாழ்க்கையை ஒரு உடை மாற்றும் லாவகத்துடன் கழைந்திட முடிந்தாலோ, தொடர் ஓட்ட பொருளாக யாரிடமாவது கை மாற்ற முடிந்தாலோ எத்தனை நன்றாக இருக்கும் .//

ரசித்த வரிகள்... மற்ற கவிதைகள் படிக்கவில்லை. வருகிறேன் விரைவில்...

குறிப்பு: கொஞ்சம் எழுத்துப் பிழைகளை மட்டும் சரி செய்து கொள்ளுங்கள்...ஆங்கிலம் கலந்து வருவதில் எனக்கொன்றும் தவறாய்ப் படவில்லை...
வாழ்த்துக்கள்....!

Sugirtha said...

பரணி,

ஆம், முதல் முறை வருகிறீர்கள்! உங்கள் உணர்வை மிக நெகிழ்ச்சியாய் கூறி இருக்கிறீர்கள். சிப்பி கிடைத்த உணர்வுக்கொப்பாய் என படித்தபோது சிலிர்ப்பாக இருந்தது... நேரம் கிடைக்கும்போது கவிதைகளை வாசியுங்கள்.
குறிப்பை நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன் :) நன்றி!

Unknown said...

உள்ளத்து உணர்வுகளை ஒரு அழகான கவிதையாய் வெளிப்படுத்துகிறது இந்த கடிதம்! எல்லோருக்குள்ளும் இந்த தவிப்பு இருக்கிறது... இதை போல் ஒரு கடிதமும் இருக்கிறது!!


இயல்பாக எழுதும்போது ஆங்கிலம் கலப்பதில் தவறில்லை என நினைகிறேன்.

Sugirtha said...

சிறு இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகையும், கருத்தும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி சுரேந்திரகுமார்.

shri Prajna said...

அன்பு சுகிர்தா ,

எத்தனை தடவை படித்தேனோ ..வரிக்கு வரி பாராட்ட தோன்றுகிறது ..நான் அடிக்கடி சொல்வேன் அம்மா கிட்ட, வாழ்க்கை ஒரு trail கொடுத்திருக்கலாம்..escape ஆகியிருப்பேன் என்று".

உதாரணதிற்கு, இந்த வாழ்க்கையை ஒரு உடை மாற்றும் லாவகத்துடன் கழைந்திட முடிந்தாலோ, தொடர் ஓட்ட பொருளாக யாரிடமாவது கை மாற்ற முடிந்தாலோ எத்தனை நன்றாக இருக்கும் யோசித்து கொண்டே இருக்கிறேன்" ...

ஆமான்னு தோணுது ...ஆனால் ??

அப்புறம் "சலிப்பென்ற உணர்வு ஒருவர் இடம் கொடுப்பதற்கு முன்னேயே வந்து ஆக்கிரமித்து கொள்கிறது. இங்கிதமென்று எதுவுமில்லை அதனிடம்."

அப்படியே...

எனக்கு அன்பை எந்த இடத்தில் நிறுத்துவது தெரியாது? அதற்கு பெயரெல்லாம் கிடையாது. எல்லா கோடுகளையும் அழித்து விட்டு, திசை காட்டிகளை கழற்றி விட்டு நடப்பதே எனக்கு சௌகர்யம்.

உண்மை உண்மை

நான் தான் இப்படியோன்னு ஒரு doubt வரும் ...என்னை நான் பார்த்த மாதிரியும் என்னால் சொல்லமுடியாததை நீங்கள் சொன்னதற்க்காகவும்...நன்றி ...

Sugirtha said...

அன்பு ஸ்ரீ,

உங்களுக்கு இந்த பதிலை ஒரு கடிதம் போலவே எழுதத் தோன்றுகிறது. எனக்கு கடிதம் எழுதுவது மிக மிக மிக,,,, பிடித்த காரியம். நீங்கள் சொல்வதைப் போல நானும் கூட, நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று அடிக்கடி நினைத்ததுண்டு. தோழியிடம் பல வேளைகளில் புலம்பியது கூட உண்டு. இந்த முதல் கடிதத்திற்கான பின்னூட்டங்களைப் பார்த்தபோது 'நான்' திருந்தி 'நாம்' என்றானதாய் உணர்ந்தேன். மனம் பிறழ்ந்த தருணங்களில், யாரோ ஒருவர், நம் அருகில் அமர்ந்து, முக்கியமாக இதைக் குறித்து எதுவுமே கேட்காமல், இரு கைகளை பற்றிக் கொண்டு 'I know what you are going through, you are not alone in this' என்று சொல்வதைப் போலான பின்னூட்டங்கள் இவை.

இன்று படித்த உங்கள் பின்னூட்டம் கூட, காலையில் புதிதாய் மலர்ந்த பன்னீர் ரோஜாவை பார்த்தது போல, என்னுள் ஒரு மலர்ச்சியைக் கொடுத்தது உண்மை.
//
உதாரணதிற்கு, இந்த வாழ்க்கையை ஒரு உடை மாற்றும் லாவகத்துடன் கழைந்திட முடிந்தாலோ, தொடர் ஓட்ட பொருளாக யாரிடமாவது கை மாற்ற முடிந்தாலோ எத்தனை நன்றாக இருக்கும் யோசித்து கொண்டே இருக்கிறேன்" ...

ஆமான்னு தோணுது ...ஆனால் ??//

ம்ம் நீங்கள் சொல்ல வருவது புரிகிறது...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி!

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...