Monday, September 27, 2010

பிரியமோ சுமையோ நானறியேன்

தேன் கனிகள் சுமக்குமென
நட்டு வைத்திருக்கிறார்கள்
விதைத்தபோதோ முளைத்தபோதோ
நான் அருகிருந்து அறிந்ததில்லை

வருடங்களை உண்டு
வளர்ந்த அது
பூத்ததுமில்லை காய்ததுமில்லை
என அங்கலாய்த்த அவர்களிடம்
எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை

எதன் நிமித்தமுமில்லாமல்
விட்டு விலகி வந்து
வெகு நாட்கள் ஆனநிலையில்
போன வருடம்
மறுபடி பார்க்க நேர்ந்தது
அது இருந்திருந்த இடத்தில்
இருந்தது
பூமிக்கு மேல்
ஓர் இரண்டடி கட்டை

அருகே சென்று பார்கிறேன்
வலிகளோ காயங்களோ
இருந்த சுவடில்லை
ஒரு வேளை காய்ந்திருக்கலாம்
வெட்டுபட்டிருந்த போது
என்ன நினைத்திருக்கும்
இப்போதென் மனதை
பற்றிகொண்டது அவ்விருட்சம்

மாதங்களே இடைவெளியென
கவனித்தபடியே இருந்தேன் அதை

ஆறு மாதம் முன் பார்க்கையில்
ஒரு புறம்
கரையான்கள் பற்றி இருக்க
நின்றது நின்றபடியே இருந்தது
சில கணங்கள் பார்த்திருந்து திரும்பினேன்

இரண்டு மாதங்கள்
முன் பெய்த மழையில் தான்
அது மீண்டும் துளிர்த்திருந்தது
முதன் முறையென
என் மனமும் கூட

இன்றடித்த வெயிலுக்கோ
இலைகள் வாட்டமுற்றிருக்கின்றன
செய்வதற்கொன்றுமில்லை
இனி நான் பார்க்க போவதுமில்லை

6 comments:

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

Sugirtha said...

நன்றிங்க கமலேஷ்!

Li. said...

இது மரத்தின் கதையல்ல... நம் அனைவரின் மனத்தின் கதை... அருமை.

Sugirtha said...

நன்றி ஒளி!

உயிரோடை said...

சுகி கவிதை நல்லா இருக்குமா

Sugirtha said...

ரொம்ப நாளா காணாமப் போயிட்டீங்கன்னு நினைச்சேன்! நன்றி :)