Thursday, March 12, 2009

கனவா காதலா

ஒரு நடு நிஷியில்
எனை அழைத்தாய்
என்னவோ சொல்லவேண்டுமென்று
பூந்தோட்டத்தில் காத்திருக்கச் சொன்னாய்

நான் யாருமற்ற அந்த இரவின் அமைதியில்
மௌனித்திருந்த தோட்டத்தை அடைந்தேன்
அங்கே நிலவுக்கு நேர் கீழிருந்த
ஊஞ்சலில் அமர்ந்தேன்
என்ன சொல்வாய் என்று யோசித்தபடியே

உள்ளமெல்லாம் தவித்து
நிலைகொள்ளாமல் எழுந்து
அருகிலிருந்த கொன்றை மரத்தடியில்
கொட்டிகிடந்த மஞ்சள் மலர்களை
பொறுக்கத் துவங்கினேன் செய்வதறியாது

என் இரு கைகளிலும்
பூக்கள் நிரம்பி வழிந்தது
அத்தனையும் அருகிலிருந்த
ஊஞ்சலில் குவித்தேன்
இன்னும் நீ வந்திருக்கவில்லை

சற்று தள்ளியிருந்த பவளமல்லியின்
வாசனையில் மயங்கி
அருகினில் சென்றேன்
ஒவ்வொன்றாக கொய்து
சேலையில் சேகரித்தேன்
சிறிது நேரத்தில்
பூக்களின் அதீத மணத்தில்
மயங்கி விழுந்தேன்

விழித்தபோது
உன் கைகளுக்குள் புதைந்திருந்தேன்
நான் சேகரித்திருந்த பூக்களெல்லாம்
உன் மேல் சிதறிக்கிடக்கிறது
நான் வெட்கத்துடன்
எனை விடுவிக்க முயல
நீ விடாது அணைக்கிறாய்
இப்போது உன் அணைப்பின்
ஒவ்வொரு ஷணத்திலும்
உன் அன்பில் திளைக்கிறேன்

புரிந்தும் புரியா
குழப்பதில் நான் விலகி நிற்கிறேன்
பின் நீயறியாத
உன் மீது நான் கொண்ட நேசம் முழுக்க
சொல்லிவிட நினைக்கிறேன்

நீ என்னையே பார்த்திருக்கிறாய்
என்னை வெட்கம் தின்கிறது
நெருங்கி நின்று புன்னகை செய்கிறாய்
நான் குனிந்து உன் விரல்களை பற்றி
உள்ளங்கையில் முத்தமிட்டு நிமிர்ந்த நொடியில்
காதினில் உன் சுவாசம் உணர்கிறேன்
என்ன சொல்ல நினைக்கிறதோ
எனக்குள் சிலிர்க்கிறது

என் கை பற்றுகிறாய்
ஊஞ்சலில் அமர்த்தி அருகினில் அமர்கிறாய்
பின் எனை உன் கைகளில் ஏந்தி
நீ என்னவள் என்கிறாய்

அந்த அன்பின் வார்த்தைகள்
எதிர்பார்த்து காத்திருந்த
என் இதயத்துக்குள் விழுந்து
சொல்லாமல் வைத்திருந்த
என் அன்போடு சேர்ந்து
விழிகளில் நிறைகிறது
ததும்பிய அன்பு
இமை தடுக்கி வழிகிறது
என் இதழெல்லாம்

இப்போது இன்னும் நெருங்கி வந்து
இதழ் சேர்ந்த நம் அன்பினை
துளித் துளியாய் ருசிக்கிறாய் விழி மூடி

1 comment:

யாத்ரா said...

நேசம் நிரம்பித் ததும்புகிற அருமையான கவிதை.