Friday, March 5, 2010

வெட்க நிலாக்கள்

கீழ் மூக்கில்
எதையோ
இழுத்து இழுத்து
ரசித்து சுவைக்கும்
ஒரு கிளியின்
ஆர்வத்தோடு
உனைச் சுவைக்க
நான் நெருங்க

கூச்சலிடும்
கிளிக் குஞ்சுகளாய்
என்னை உன்னிடம்
நெருங்க விடாது
பின் இழுத்துக் கொள்கிறது
இந்த வெட்கம்

எத்தனை முயன்றும்
வெட்கம் தொலைத்து
வெளிவர முடியாத தவிப்பில்
உன்னை பார்க்கையில்
கண்களில் வழியும்
குறுஞ்சிரிப்போடு
நீயும் ஏதேதோ
செய்கிறாய்

கடைசி முயற்சியாய்
பல வண்ணக் குப்பிகளில்
என் வெட்கத்தை நிரப்பி
இறுக மூடி
கிளைக்கொன்றாய்
அதில் தோரணம் அமைக்கிறாய்

தொந்தரவுகளற்று
நிசப்தத்தின் இசைக்கு
இசைந்தபடி
நம்மை மறந்து
ஆழ்ந்து நேசிக்கையில்
உயிர்பெற்று பிரகாசிக்கும்
வெட்க நிலாக்கள்
பூரண வெளிச்சத்தில்
கொஞ்சும் கிளிகள்

Sunday, February 28, 2010

என் ஆழ்மன காதலை

வருவதற்கு முன்னே
வந்து நிற்கிறேன்
வந்ததும்
கட்டி அணைக்கிறாய்

பார்காத பொழுதில்
பக்கத்தில் வருகிறேன்
பார்க்காதது போல்
பார்த்து விடுகிறாய்

தொடும் தூரம்
நெருங்கி நிற்கிறேன்
தொடாதும்
தொட்டு விடுகிறாய்

ரகசிய மொழியில்
பேசிக் கொள்கிறேன்
மௌனமாய் அதை
ஆமோதிக்கிறாய்

பார்க்கிறாய்
தொடுகிறாய்
அணைக்கிறாய்
ரசிக்கிறாய்

Wednesday, February 24, 2010

நினைவுகள் நிறைகுகை

நான் அறியா ஏதோ ஒரு மிக நெருக்கமான புள்ளியில் உன்னை நீ என்னோடு இணைத்திருக்கிறாய். எத்தனை முறை நான் அதைக் கண்டறிய முயன்றபோதும் எனக்கு புலப்பட்டதே இல்லை அந்தப் புள்ளி. இனியும் புலப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அது எனக்கு தன்னை அன்றாடம் நினைவு படுத்த தவறுவதில்லை. அந்த புள்ளியிலிருந்து வெளிப்படும் நினைவின் கதிர்கள் என்னை அவ்வப்போது முடக்கி விடுகிறது. பிறகு நான் இயங்க திறனின்றி, நினைவுகள் நிறைந்த குகைக்குள் விழுகிறேன்.

எவ்வழி விழுகிறேன் என்பதோ, எப்படி வெளியேறுவது என்றோ எதுவும் தெரியாமல் குகைக்குள் கேட்கும் நினைவின் குரல் ஒலிக்கும் திசை நோக்கி நடக்கிறேன். அது என்னை உள்ளே உள்ளே இழுத்துச் செல்கிறது. ஒவ்வொரு நினைவின் சித்திரமும் அதன் பக்கச் சுவர்களில் வரையபட்டிருப்பது எனக்கு மிகத் தெளிவாய் தெரிகிறது. அந்த சித்திரங்களைப் பார்க்கும் போது அதை சார்ந்த இன்ன பிற நினைவுகள் என்னை வந்தடைகிறது. ஒரு காட்டாற்றின் வேகத்தோடு நினைவுகள் என்னை அடித்து செல்கிறது. அதன் முடிவில் எங்கோ விட்டு செல்கிறது. நான் தொடர்ந்து நடக்கிறேன் இன்னொரு சித்திரம், இன்னொரு பயணம். பிறகு ஒருவழியாய் என்னையறியாமலே எப்படியோ வெளிவருகிறேன்.

நான் வெளிவந்த பிறகும் நான் அறியா ஒரு கணத்தில் என்னில் அந்த புள்ளியை இயக்க என்னைத் தொடர்கிறது. நான் தப்பி செல்ல எடுக்கும் என் எத்தனை பிரயத்தனங்களும் பலனளித்தபாடில்லை. மாறாக என்னை அல்லாது ஒருவரும் போகாத அதன் தனிமையில் நான் கரைகிறேன். விட்டு செல்ல மனமின்றி அதன் கதைகளையும் கேவல்களையும் நான் தொடர்ந்து கேட்கிறேன். அது என்னுள் அந்த புள்ளியை மறுபடி இயக்குகிறது. நான் மறுபடி விழுகிறேன். பின் என்னை தொடரும் நம் நினைவுகள்.

Friday, February 19, 2010

எனக்கு அறிமுகமான நான்

எழுதுவதற்கான மன நிலையிலிருந்து சில நாட்களாய் விலகியிருந்த என்னை எழுத வைத்த லாவண்யாவுக்கு நன்றி ! :)

அந்த நாட்களை யோசிக்கும்போது என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறதோ அதை எழுதறேன். அப்போது தான் என்னை நானே புரிந்து கொள்ள தொடங்கினேன்னு நினைக்கறேன்.அதில் முக்கால் பங்கு நான் பெண்கள் பள்ளி/கல்லூரி விடுதியில் தான் கழித்தேன். வீட்டிலிருந்த போதெல்லாம் நான் நிறைய பேசியதாக நினைவில்லை. இப்போதும் கூட நான் அப்படித் தான். என் நண்பர்களிடம் பேசும் அளவுக்கு வீட்டில் யாரிடமும் பேசியதில்லை. ஆனால் விடுதியில் நான் நிறைய குறும்பு (அ) சேட்டைகள் பண்ணி இருக்கிறேன். ஆனாலும் அப்பா பயம் எனக்கு அப்போது அதிகம் ஆதலால் எந்த சேட்டையும் முன்னால் நின்று பண்ணியதில்லை.

எனக்கு பிடிக்காத நாட்கள் ன்னா அது பரீட்சைக்கு முன்னாடி படிக்கறதுக்கு விடுமுறை விடுவாங்களே அதான். அப்போ எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியாது. பரீட்சைக்கு முந்தய நாளை தவிர மற்ற நாட்களில் படிப்பது பிடிக்காது. அதனாலே வம்புக்கிழுக்க யாராச்சு கிடைச்சாங்கன்னா எனக்கு கொண்டாட்டம் தான். ஆனா ஓரளவுக்குதான் வம்புக்கிளுப்பேன் நம்புங்க.

நான் படித்த பெண்கள் கல்லூரி விடுதியில் எங்களுக்கு எந்த கடிதம் வந்தாலும் அதை வார்டன் படிச்சுட்டுதான் கொடுப்பாங்க. அப்போ ஏப்ரல் 1 க்காக ஒரு அறைத் தோழிய ஏமாத்த ஏற்கனவே வந்த ஒரு கடிதத்தின் மேலுறையை எடுத்து அதற்குள் நாங்கள் எழுதிய ஒரு காதல் கடிதத்தை வைத்து கொடுத்துவிட்டு இதை படிச்சுட்டு மேம் உன்னை வந்து பார்க்க சொன்னாங்கன்னு சொல்லிட்டு போய் ஒளிஞ்சு நின்னு அவளோட உணர்வுகளை நோட்டம் விட்டோம். அவள்முகம் மாறியவுடன் தற்செயலா போறமாதிரி என்னாச்சு என்னாச்சு ன்னு கேட்டு போனோம்.அவள் எனக்கு இது யாருன்னே தெரியல எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லன்னு சொன்னாள். பெருந்தன்மையா சரி வா நானும் வரேன் போய் பேசலாம் இதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லேன்னு சொல்லி, அவளை கூட்டிட்டு மேம் ரூம் முன்னாடி போனதும் இந்த நாடகத்தை முடிச்சு கூட்டிட்டு வரலாம்ன்னு கூட்டிட்டு போனேன். ஆனா ரூம் பக்கத்துல போனதும் மேம் வெளிய வந்துட்டாங்க. அவங்களை பார்த்து ஒரு புன்னகைய உதிர்துட்டு, அங்க பக்கத்துல இருந்த தண்ணி குடிக்க வந்த மாதிரி பாவலா பண்ணிட்டு, அவள எதுவும் பேச விடாம அவளுக்கு விளக்கி கூட்டிட்டு வரதுக்குள்ள எனக்கு தான் வேர்த்துருச்சு.

அப்றோம் இன்னொரு ஞாபகம், அப்போ எல்லாம் எனக்கு ஆங்கிலத்துல அவ்வளவு ஞானம் கிடையாது. இப்போ கொஞ்சம் பரவால்லன்னு நினைக்கறேன். அப்போ என்னையும் மதிச்சு என்னோட தோழி தமிழ் செல்வி அக்கா அவங்க சித்தி சித்தப்பா க்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத என் உதவிய நாடினாங்க. எனக்கு இப்போதும் சித்தி சித்தப்பாவை ஆன்டி, அங்கிள் ன்னு கூப்பிடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அம்மா அப்பாவுக்கு இணையாக நான் அவர்களை மதிப்பதால் எனக்கு ஆன்டி, அங்கிள் என்பது அன்னியமாகப் படும். அதனால அப்போ தமிழுக்கு சொன்னேன் 'Step Mother, Step Father' ன்னு எழுத சொல்லி அவங்களும் எழுதினாங்க. பிறகு அந்த வார விடுமுறைக்கு அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்து என்ன துறத்தி துறத்தி அடிச்சாங்க. எனக்கு என் தப்பு புரிந்தாலும் என்னால் ஏனோ சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவங்கள் கோபம் இன்னும் அதிகம் தான் ஆச்சு. அதை இப்போ நினைச்சாலும் எனக்கு சிரிப்பு தான் வருது :))

முதல் முறை அந்த மாதிரி ஜோக் ஒன்று ஸ்ரீதேவி சொன்னாள், சவிதா எனக்கு சொன்ன அவள் ரகசிய காதல், பதிலுக்கு நான் அவளிடம் பகிர்ந்து கொண்ட என் ரகசிய காதல்.

அப்றோம் நாவல்கள் படிக்கத் தொடங்கினேன், முதல் கவிதை மாதிரி ஏதோ எழுதினேன்.
கிரிக்கட் பைத்தியமா இருந்தேன். நிறைய சிரித்திருக்கிறேன். நிறைய விளையாடி இருக்கிறேன்.

அம்மா அருகாமைக்காக ஏங்கி இருக்கிறேன் பல நாட்கள்,சமயங்களில் அனாதை போல உணர்ந்திருக்கிறேன்,தனிமை பழகியிருக்கிறேன்,போர்வைக்குள் புதைந்து நிறைய அழுதிருக்கிறேன்.

இந்த மாதிரி நிறைய இருக்குங்க. இப்போதைக்கு இது போதுமா? :)

Tuesday, December 22, 2009

வாகை மரக்கிளி

எனக்கு முழுப் பரீட்சை விடுமுறை விட்டிருந்தார்கள். நான் சித்தப்பா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். என் விடுமுறை நாட்களை என் சித்தப்பா வீட்டில் கழிப்பது எனக்கு பேரின்பம். அங்கே காலையில் நேரத்தில் எழுந்திருக்கவேண்டியதில்லை . நிறைய வண்ணங்களில் பட்டாம்பூச்சி பார்க்கலாம். இன்னும் நிறைய, நினைத்துக் கொண்டிருக்கும்போதே வெளியில் புல்லட் சத்தம் கேட்டது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் சித்தப்பாவோடு ஊருக்கு கிளம்பினேன். முக்கியமாய் அங்கே அந்த பெரிய தொட்டியில் நீச்சல் கத்துக் கொள்ள பெரும் ஆர்வமாய் இருக்கும். ஊருக்கு போனவுடனே நானும் என் தங்கையும் சித்தப்பாவிடம் கேக்க ஆரம்பித்துவிட்டோம். சித்தப்பா நீத்தடிக்கப் போலாமாங் சித்தப்பா. அது பெரிய தொட்டி என்பதால் தண்ணீர் ஒரு இரண்டடிக்கு குறைவாக இருந்தால் தான் எங்களுக்கு அனுமதி கிடைக்கும். இன்னிக்கு தொட்டி நெறைய தண்ணி இருக்குது நாளைக்கு கம்மி ஆயிரும் நாளைக் போலாம் என்றார்கள். கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தது.

சித்தி துவைக்க துணியை எடுத்துக் கொண்டு கிணற்றுக்கு சென்றார்கள். நான் சித்தியுடன் சென்றேன். சித்தி மோட்டார் எடுத்து விட்டு துணி துவைக்கத் துவங்கினார்கள். நான் வாய்க்காலில் இறங்கி ஓடிக் கொண்டிருந்த தண்ணீரில் காலை நனைத்தபடி நின்று கொண்டிருந்தேன். பிறகு துவைத்து முடித்து சித்தி துணிகளை கூடைக்குள் போட்டு எடுத்துக் கொண்டார்கள். நான் சோப்பு டப்பாவை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தேன்.

மதியம் சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு எழுந்தேன். அங்கே போனால் எனக்குத் தோழி சுபா. அவள் அப்புச்சி ஊரும் இது என்பதால் அவளும் விடுமுறைக்கு வருவாள். சுபாவின் அப்புச்சி தோட்டத்திலிருந்து பால் எடுத்து வந்திருந்தார்கள். நான் அவரைப் பார்த்தவுடன் ஐயா சுபா வந்துட்டாளாங்கியா என்று கேட்டேன். நாளிக்கு வருவா நீ எப்ப வந்த என்றார். நான் இன்னிக்காலீல வந்தனுங் என்றேன். பிறகு சித்தியிடம் நான் மேவறத்து திண்ணைக் போறங் சித்தி என்று கூறி விட்டு, வீட்டை சுற்றிக் கொண்டு மேவற சுவரை ஒட்டி இருந்த திண்ணைக்கு சென்றேன். மேவறத்து திண்ணை, சுவரை ஒட்டி, வீட்டின் இந்த கடைசியிலிருந்து அந்த கடைசி வரை, நிலத்திலிருந்து ஒரு அடிக்கு மேலாய் நீண்டிருக்கும். திண்ணைக்கு அருகில் ஒரு பெரிய வாகை மரம் இருக்கும். திண்ணையின் ஓரத்தில் எங்கள் ஐயா அமர்ந்திருந்தார்கள். அவருடன் அவருடைய நண்பர் இன்னோர் ஐயா அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

நான் அங்கு போய் அவர்களருகே அமர்ந்து கொண்டு தோட்ட வேலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கள் தோட்டத்தில் இருந்தும் ஆட்கள் வேலையிலிருந்து திரும்பி வந்தார்கள். என்னைப் பார்த்து எப்ப வந்த என்று என்னிடம் வினவி என் பதில் கேட்டு பின் எத்தனை நாள் ரீவு (லீவ்) என்று கேட்டு என் பதில் வரக் காத்திருந்து பின் வாசலுக்குள் நுழைந்தார்கள். அவர்களிடமிருந்து வியர்வையும், மண் வாசனையும் கலந்து ஒரு ரம்மியமான மணம் வந்தது.நான் ஒரு முறை ஆழமாக சுவாசித்தேன். பிறகு சுவற்றுக்கு பின்னாலிருந்து கொத்து, கூடை எல்லாம் வைக்கும் சத்தம் கேட்டது. எல்லாம் வைத்துவிட்டு அவரவர் வீடு நோக்கி சென்றார்கள்.

நானும் சுபாவும் தவறாமல் பண்ணாங்கல் விளையாடுவோம். நீச்சலைத் தவிர எங்களுக்கு மிக பிடித்த இன்னொரு விளையாட்டு இது. ஏனோ பண்ணாங்கல் விளையாடினால் மழை வராது என்றொரு நம்பிக்கை இருந்தது பெரியவர்களுக்குள். நாங்கள் விளையாடுவதைப் பார்த்தால் மொதலையே மழை இல்ல இதுல இது வேறயா என்பார்கள். நாங்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டோம். நாளை சுபா வந்துவிடுவாள் கல் விளையாடலாம் என்று அதற்காக கற்கள் பொறுக்க தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் கற்களை எவ்வளவு பாதுகாப்பாய் வைத்தாலும் அடுத்த முறை தேடையில் அது கிடைக்காது.அதனால் ஒவ்வொரு முறையும் தேடவேண்டும்.

ஒரே அளவில் கொஞ்சம் மொழு மொழுப்பாய் இருந்த கற்களை தொலாவினேன். எனக்குள் நாங்கள் பண்ணாங்கல் விளையாடும் போது பாடும் பாட்டை நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன். ஒண்ணானே ஊசி மேலூசி, ரெண்டானே ரத்னப் பதக்கம், மூணானே முத்து சிப்பி அதுக்கு மேல் நினைவு வரவில்லை. சுபா தான் முதலில் பாடிக் கொண்டே ஆடுவாள். அவளிடமிருந்து தான் நான் கற்றுக் கொண்டேன். கற்கள் கண்டெடுத்துவிட்டேன். இருட்டாயிருச்சு உள்ள வா என்று விட்டு ஐயா உள்ளே சென்றார்கள்.

பொழுது சாய்ந்து அந்தி வானம் மிக அழகாய்த் தோன்றியது. எங்கிருந்தோ கிளிகள் கூட்டம் கூட்டமாய் பறந்து வந்தது. வாகை மரத்தில் தஞ்சம் கொண்டது. ஒவ்வொரு விடுமுறையும் இந்த கிளிகளைப் பார்ப்பேன். எனக்கு எல்லா கிளியும் ஒரே மாதிரித் தெரிந்தது. அதனதன் இடம் சென்றடையும் வரை கீ கீ கீ என ஓயாது சத்தம்.அத்தனை கிளிகளும் என்ன பேசிக்கொள்கிறது புரியவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து வீடு திரும்பிய என் மனமிடும் குதூகலம் ஒத்திருந்த ஒரு இனிய ராகம் அதில் இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த என் மனதை அந்த கணம் என்னவோ செய்தது.

வாகை மரத்தில் ஒரு பொந்து இருக்கும். அங்கு எப்போதும் எந்நேரமும் ஒரு கிளி இருக்கும். இன்று காலையிலிருந்து நான் அதைப் பார்கவில்லை. இப்போது ஒரு கிளி அதற்குள் போனது. நானும் உள்ளே சென்று அதன் கூடு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசையாய் இருந்தது. எனக்கு அந்த கிளியுடன் பழக ஆசையாய் இருந்தது. சற்று நேரம் பொறுத்து கவனிக்கிறேன் அந்தக் கிளி பொந்திலிருந்து தலையை வெளியில் விட்டு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

Monday, December 14, 2009

இணைந்த கைகள்

இருவரும் மாறி மாறி
காகிகத்தில்
இடது கை விரல்களை
விரித்து வைத்து
விரல் வடிவம்
வரைந்தபடி இருந்தோம்
ஒரு கட்டத்தில்
விளையாட்டு சலித்து
உன் காகித்தை
கசக்கி அறையின்
மூலையில்
எறிந்து விட்டுப்
போய்விட்டாய் நீ
பின்னே ஓடி வந்து
நீ படி இறங்கிப்
போனதை
உறுதி செய்து கொண்டு
கசங்கிய
உன் காகிதத்தின்
தாள் நீவி
உன் வெற்றுக் கையுள்
என் கை வைத்து
நிரப்பினேன்
காகிதக் கையில்
ரேகை வரிகள்
முளைக்கிறது
மெதுவாய்
முதலிரு கோடுகள்
இணைகிறது
மென்மையாய்
காகிதம் துடிக்கிறது

Thursday, December 10, 2009

இன்றைக்கும் என்றைக்கும்

தொடுகையில் சிலிர்க்கிற
தொடர்கையில் துடிக்கிற
விரலூர்கையில் தகிக்கிற
வெட்கம் பொங்கி வழிகிற
மின்னும் கண்களைத் தவிர்க்கிற
மார்பினில் தலை கவிழ்க்கிற
காதோரம் கிசுகிசுக்கிற
ஆளுமையில் தவிக்கிற
விடுவிக்க கெஞ்சுகிற
புணர்கையில் சுகிக்கிற
முத்தங்களில் கரைகிற
முடிக்கையில் துவள்கிற
நித்தியப் பெண்மை

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...