நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிரியை / கதை சொல்லியாக பணியாற்றத் தொடங்கி இருக்கிறேன். அங்கே மூன்று வயது முதல் பதிமூன்று வயது பிள்ளைகளுடன் கதை சொல்லி, உரையாடி, விளையாடி மகிழ்வது மிகவும் ஆனந்தமும், நிறைவும் தரும் விஷயமாக இருக்கிறது. அங்கே நடக்கும் நிகழ்வுகளை எழுதலாம் என்று நினைக்கிறேன். பெயர்களை மட்டும் மாற்றிக் கொள்கிறேன்.
ஆறு வயது சுடரை நான் பிரத்யேகமாக கவனிக்கத் துவங்கியது எப்போதென்றால் அவன் மிக்ஸி டுர் டுர் டுர் என்று காதைப் பொத்திக் கொண்டு பள்ளியின் கிச்சனில் இருந்து ஓடி வந்த போது தான். அவனுடைய முகத்தில் அவ்வளவு பயம். பள்ளியில் உதவியாளராக வேலை செய்யும் ராணி அவனிடம், 'இனி மிக்ஸி போட மாட்டாங்க வா சுடர்' என்று அழைத்தபடியே அவனைப் பின் தொடர்ந்து வந்தார். அப்போது அவனுக்கு சத்தம் ஆகாது என்று அவனைக் குறித்து பயின்று கொண்டேன். சுடரின் கேள்விகள் நான் இத்தனை காலங்கள் கவனிக்கத் தவறியவைகளை எல்லாம் என்னை கவனிக்கச் செய்கின்றன.
பள்ளி வளாகம் பெரிய மைதானமும்,மரம், செடி கொடிகளும் என இயற்கை சூழல் நிறைந்து இருக்கும். சில வகுப்புகள் குடில்களில் நடக்கும். சுடர் எங்கே இருப்பானோ தெரியாது ஆனால் நான் பாத்ரூமுக்கு சென்றால் எப்படி கவனிப்பானோ வந்து வாசிலிலேயே காத்திருப்பான். பாத்ரூமுக்கு போகும்போது ஏன் எல்லாரும் தாழிட்டுக் கொள்கிறார்கள் என்பது அவனை ஆச்சரியக்க வைத்தது. ஒரு நாள் என்னிடம், 'did you knock the door when you went to the bathroom?' என்று கேட்டான். நான் இல்லையே நான் knock பண்ணவில்லையே என்றேன். தாழிடுவதைப் போல சைகை செய்து am asking did you knock it என்றான். அப்போது தான் அவன் lock ஐத் தான் knock என்று கேட்கிறான் என்று புரிந்து கொண்டேன். oh yes I locked it என்றேன். எதுக்கு knock பண்ணே என்று கேட்டான். (அவன் என்னிடம் தமிழில் பேசும்போது வா போ என்று தான் பேசுவான். எனக்கு அது அழகாக தோன்றியதால் 'ங்க' போட சொல்லவில்லை.) சில விஷயங்கள எல்லார் முன்னாடியும் பண்ணாம ப்ரைவேட்டா பண்ண நினைப்போம் இல்லையா அதான் லாக் பண்ணேன் என்றேன். அவன் இந்த பதிலை புரிந்து கொண்டாலும் திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்டான்.
சிறிது நேரம் கழித்து பிள்ளைகள் எல்லாம் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது , சுடர், நாங்கள் அமர்ந்து பயிலும் டென்ட்டின் முன் கதவை மூடி தாழிட்டான். அப்போது அவனிடம் அப்படி செய்யாதே சுடர் உள்ளே யாராவது இருந்தால் பயப்படுவார்கள் என்றேன். அதற்கு, நான் பார்த்துவிட்டேன் உள்ளே யாரும் இல்லை என்றான். இருந்தாலும் திறந்தே வை என்றேன். அதைத் திறந்து விட்டு என்னிடம் வந்தவன், ஏன் அதை தாழிட கூடாது என்றான் திரும்பவும். நான் தான் சொன்னேனே உள்ளே யாராவது இருந்தால் நாம் மாட்டிக் கொண்டோம் என்று பயப்படுவார்கள் என்றேன். உள்ளே தான் யாருமே இல்லையே என்றான். அது எல்லோருக்குமான இடம் இல்லையா அதனால் திறந்தே இருக்கட்டும் என்றேன். நீ பாத்ரூம் லாக் பண்றது ஓக்கேன்னா இது மட்டும் ஏன் சரியல்ல என்று கேட்டான். இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராது ஒரு கணம் திகைத்தேன். அவனிடம் சில விஷயங்கள் நமக்கு எல்லார் முன்னாடியும் பண்ண முடியாது அதனால பாத்ரூம் கதவை லாக் பண்ணலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே குழந்தைகள் அதையும் லாக் பண்ணக்கூடாது என்பது நினைவுக்கு வர சின்னப் பசங்க எந்தக் கதவையும் லாக் பண்ண கூடாது என்றேன். அவன் அடுத்த கேள்விக்கு யோசிக்கும் போது எனக்கு அடுத்த வகுப்புக்கு நேரம் ஆகவே நான் மீண்டும் சந்திக்கிறேன் என்று அவனிடம் விடை பெற்றேன். பிறகு நாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த விதிமுறைகள் குழந்தைகளுக்கு எவ்வளவு குழப்பத்தை உருவாக்குகிறது என்று யோசித்தேன். அவன் ஒரு இடத்தில் சரியாக இருக்கும் ஒன்று இன்னொரு இடத்தில் ஏன் சரியல்ல என்று யோசித்தது எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. இப்படியான ஒரு inquisitive mind ஐ நாம் வளர வளர தொலைத்து ரொம்பவும் dull mind உடையவர்களாக ஆகி நாம் எவ்வளவு bore ஆகிவிடுகிறோம் என்றும் யோசித்தேன். இந்த குழந்தைகள் என் மீட்பர்களாக இருக்கிறார்கள்.
பி:கு: சுடரைக் குறித்து எழுத நிறைய விஷயங்கள் இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.